குலசேகரபட்டினத்தில் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவுதளம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

மதுரை: குலசேகரப்பட்டினம் ஏவுதளம் விரைவில் பணி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

ராமேசுவரம் செல்வதற்காக மதுரை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஸ்பேஸ் ஷட்டில் 2 முறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஒருமுறை கடலிலும், ஒருமுறை விமான ஓடுதள பாதையிலும் சோதனை செய்யப்பட்டது. இறுதிக்கட்ட சோதனை விண்வெளிக்கு அனுப்புவது தான்.

ஆதித்யா வரும் ஜனவரியில் எல் ஒன் சுற்றுப் பாதையை சென்றடையும். அதன் பிறகு அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்திலிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். குலசேகரபட்டினத்தில் தயாராகும் ஏவுகணை தளம் பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்கும்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஏவப்படும் சிறிய ராக்கெட்டுகள், இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அதிகசெலவு ஏற்படுகிறது. குலசேகரப்பட்டினத்தில் ஏவப்படும் விண்கலங்கள் நேரடியாக விண்வெளியை சென்றடையும். எஸ்.எல்.வி போன்ற சிறிய வகைராக்கெட்களுக்கு குலசேகரப்பட்டினம் ஏவுதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிலம் கையகப்படுத்தும் பணி ஏறத்தாழ நிறைவடைந்து விட்டது. சுற்றுச்சுவர் கட்டுவது உள்ளிட்ட பாதுகாப்பு பணிகள் முடிந்ததும் 2 ஆண்டுகளில் ஏவுகணை தளம் கட்டி முடிக்கப்படும். நூறாண்டுக்கு பிறகு பூமியை தாக்கவுள்ளதாக ஒரு விண்கல் குறித்து பல்வேறு தகவல்கள் வருகின்றன. அமெரிக்காவில் உள்ள டார்க் மிஷின் போன்று, நாமும் அதனை சோதனை செய்ய வேண்டும்.

அந்த விண்கல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட எங்கு வேண்டுமானாலும் விழலாம். இது நமக்கு மட்டும் உண்டான பிரச்சினை அல்ல. உலக நாடுகள் அனைத்தும் இந்த விண்கல் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும். இது போன்ற தகவல்களை அறிய நமக்கு பலமான விண்வெளி தொழில் நுட்பம் அவசியம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE