குறுவை விளைச்சல் 33% குறைவு; ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்குக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "குறுவை சாகுபடிக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி படுகையின் பிற மாவட்டங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாததால், 2 லட்சம் ஏக்கரில் குறுவைப் பயிர்கள் கருகியுள்ள நிலையில், கூடுதலாக மூன்றரை லட்சம் ஏக்கரில் விளைச்சலும் குறைந்திருப்பது காவிரிப் படுகை உழவர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் ஏறக்குறைய ஐந்தரை லட்சம் பரப்பளவில் குறுவை நடவு செய்யப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் இதுவரை இல்லாத அளவில் உழவர்கள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால், பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகத்திடம் இருந்து தண்ணீர் கிடைக்காததாலும் காவிரிப் படுகை உழவர்கள் இரு வகைகளில் பாதிக்கப்பட்டனர்.

குறுவை சாகுபடி தொடங்கிய காலத்திலிருந்தே தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வெகுகாலத்திற்கு முன்பிருந்தே காவிரி நீர் சென்றடையவில்லை. அதனால், சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகி உழவர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்ததி தான். இது தவிர இன்னொரு வகையிலும் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தான் புதிதாக தெரியவந்திருக்கும் செய்தி ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சத்து 96,215 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுவரை 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் அறுவடை முடிவடைந்திருக்கிறது. அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் கிடைத்த நெல் விளைச்சல் குறித்து ஆய்வு செய்த போது தான், விளைச்சல் 33% குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் வழக்கமாக ஏக்கருக்கு 2.4 டன் நெல் கிடைக்கும். கடந்த ஆண்டு அதே அளவு தான் விளைச்சல் கிடைத்தது. ஆனால், இந்த முறை சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1.69 டன் என்ற அளவிலேயே உள்ளது. தண்ணீர் சென்று சேராத சில கடைமடை பாசனப் பகுதிகளில் 1.02 என்ற அளவில் தான் மகசூல் கிடைத்துள்ளது. பிற காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மகசூல் இதைவிட மோசமாக இருப்பது உறுதியாகியுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை மகசூல் குறைந்ததற்கு முதன்மையான காரணம் மேட்டூர் அணையிலிருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படாதது தான். மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி முதல் 18,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டால் தான், கடைமடை பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கும். ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாகவும், பின்னர் 8000 கன அடி, 6500 கன அடி, 3500 கன அடி என்ற அளவுக்கு குறைக்கப்பட்டு விட்டது. நெற்பயிர்கள் கதிர் பிடிக்கும் நேரத்தில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் தான் விளைச்சல் குறைந்ததுள்ளது. விளைச்சல் குறைந்ததால் காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் குறுவை சாகுபடியின் முடிவை ஆய்வு செய்தால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தான் உழவர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. அதற்கு முந்தைய 7 ஆண்டுகளில் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் கடுமையான இழப்பை மட்டுமே சந்தித்துள்ளனர். நடப்பாண்டிலும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர்கள் கருகியது, மீதமுள்ள பகுதிகளில் மகசூல் குறைந்தது என உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாகுபடிக்காக செய்யப்பட்ட செலவைக் கூட அவர்களால் எடுக்க முடியாது என்பதால், இந்த ஆண்டு உழவர்கள் பெரும் கடன் சுமையில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

எனவே, தண்ணீர் இல்லாதால் கருகிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அத்துடன், தண்ணீர் இல்லாததால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கும், பாதிப்பின் அளவுக்கு ஏற்ற வகையில் அதிக அளவாக ரூ.25,000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்