உதிரும் கான்கிரீட் பூச்சு, வலுவிழந்த சுவர்கள்... - பர்கூர் அருகே தொகுப்பு வீடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் அச்சம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிரும் நிலையில், வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பர்கூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டது ஒப்பதவாடி கிராமம். தமிழக எல்லை மற்றும் ஆந்திர மாநிலத்தை ஒட்டி இக்கிராமம் உள்ளது. இங்குள்ள காளியம்மன் கோயில் அருகே பழங்குடியின மக்கள் (இருளர் இன) வசித்து வருகின்றனர்.

இவர்கள் 100 நாள் வேலைத் திட்டம் மற்றும் காடுகளில் கிடைக்கும் விறகுகள், தேன் ஆகியவற்றைச் சேகரித்து அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு கடந்த 1989-ம் ஆண்டு அரசு சார்பில் 35 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது, இதில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு 34 ஆண்டுகள் கடந்த நிலையில் போதிய பராமரிப்பு இல்லாததால், வீடுகளில் சுவர்களில் விரிசல் விழுந்து வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக, வீடுகளின் மேற்கூரைகள் 95 சதவீதம் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து உதிர்ந்து வருகிறது. மேலும், மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் கொட்டும் நிலையுள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ள இந்த வீடுகளில் அச்சத்துடன் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வசிக்கும் மக்கள், தொகுப்பு வீடுகளை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு வீடுகளை கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் உள்ளிட்ட சில பெண்கள் கூறியதாவது: சேதமான தொகுப்பு வீட்டில் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வசித்து வருகிறோம். வீட்டின் சுவர்களில் விரிசலும், சாய்தளமாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையில் மழைநீர் கசிந்து திடமற்ற நிலையில் உள்ளன. இதனால், பெரும்பாலும் தெருக்களில் தான் உறங்க வேண்டிய நிலையுள்ளது.

மழைக் காலங்களில் வழியின்றி வீட்டுக்குள் இருப்போம். அதுவும் மழை நிற்கும் வரை உறங்க மாட்டோம். மேற் கூரை கான்கிரீட் பூச்சு அடிக்கடி உதிர்வதால், வீட்டின் உள்ளே அமர்ந்து சாப்பிடக் கூட முடியாது. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்வதில்லை. இதனால், இந்த தண்ணீரைப் பருகினால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இந்த வீடுகளை இடித்து அகற்றி விட்டு, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டித்தரக்கோரி, கடந்த 9-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். அன்று இரவு பெய்த மழையில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில், 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எங்கள் நிலையை அறிந்து புதிய வீடு கட்ட கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லை. எனவே, ஆட்சியர் ஆய்வு செய்து எங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE