1,666 புதிய அரசு பேருந்துகளுக்கு ரூ.371 கோடியில் அடிச்சட்டங்கள் கொள்முதல்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வரின் உத்தரவின்படி, ரூ.371.16 கோடி மதிப்பில் 1,666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு குறிப்பாக விழுப்புரம் - 344, சேலம் - 84, கோயம்புத்தூர் - 263, கும்பகோணம் - 367, மதுரை - 350, திருநெல்வேலி - 242 என மொத்தமாக நகரம் மற்றும் புறநகர் பேருந்து சேவைகளுக்காக 1,650 அடிச்சட்டம் கொள்முதல் செய்யவும், மலைவாழ் மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூருக்கு பிரத்யேகமாக 16 அடிச்சட்டங்களும் என 1,666 அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இது முற்றிலும் தமிழக அரசு நிதியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளாகும். கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளைத் தயாரித்து வழங்க தேர்வான நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2 மாதத்துக்குள் முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். பொங்கல் பண்டிகைக்குள் பெரும்பாலான பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்தகட்டமாக 552 பேருந்துகள் கொள்முதலுக்கான டெண்டர் இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் புதிய பேருந்துகள் வலம் வரும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE