இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவை வந்தனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயரதிகாரிகள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர். இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.

போர் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து முதல் மீட்பு விமானம் நேற்று முன்தினம் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து 212 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மீட்பு விமானம் நேற்று காலை டெல்லிக்கு வந்தது. அங்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களை வரவேற்றார். மீட்கப்பட்ட இந்தியர்களில் 21 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

கோவை, திருவாரூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களை சேர்ந்த 21 தமிழர்களுக்கு, தமிழக அரசு சார்பில் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு, அவர்களில் 14 பேர் சென்னை விமான நிலையத்துக்கும், 7 பேர் கோவை விமான நிலையத்துக்கும் நேற்று வந்தனர்.

சென்னை விமான நிலையம் வந்த 14 பேரை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலாநிதி வீராசாமி எம்.பி. அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, அவர்கள் சொந்த ஊர் செல்ல தமிழக அரசு சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வந்த 14 பேரில், 2 பேர் மாணவிகள், 12 பேர் மாணவர்கள். இஸ்ரேலில் ஒட்டுமொத்தமாக 114 பேர் இருப்பதாக அயலகத் தமிழர் நலத் துறையினர் கண்டறிந்துள்ளனர். துறையின் ஆணையர் அவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

அனைவரையும் மீட்கும் முயற்சி, தமிழக அரசின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் வந்துள்ள மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அரசு சார்பில் உதவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கூறும்போது, “இஸ்ரேலில் உள்ள மற்ற தமிழர்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். 90 சதவீதம் பேர், உயர் கல்விக்காக சென்ற மாணவர்கள்தான். அனைவரும் வாட்ஸ்-அப் குழு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். போரால் தமிழர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர். அதேநேரத்தில், இஸ்ரேலில் உள்ள தமிழர்கள் மட்டுமே தொடர்புகொண்டுள்ளனர். காசா, பாலஸ்தீனம் பகுதியில் இருந்து இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை” என்றார்.

மாணவர்கள் கூறும்போது, “கடந்த 7-ம் தேதி முதல் இஸ்ரேலில் போர் நடந்து கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய நாளில் இருந்தே, எங்களை பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அந்த அறிவுறுத்தல்களை நாங்கள் பின்பற்றினோம். இதற்கிடையில் தமிழக அரசு எங்களைத் தொடர்பு கொண்டு மீட்டது. நாங்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ளோம். இஸ்ரேலில் மீண்டும் இயல்பு நிலை திரும்பிய பிறகு, நாங்கள் அங்கு சென்று படிப்பைத் தொடர்வோம். இஸ்ரேல் அரசும், பல்கலைக்கழகமும் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது. அங்கு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். எனவே, பெற்றோர் பதட்டப்பட வேண்டாம்” என்றனர்.

கோவை ஆட்சியர் வரவேற்பு: இதேபோல, கோவை விமான நிலையம் வந்தடைந்த 7 பேரை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்டு வந்தமைக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE