அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ் உட்பட 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடம் வீணாகும் நிலை: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கை கடைசி தேதியை நீட்டித்து கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்துகிறது.

இதேபோல, அரசு மருத்துவ கல்லூரிகளில் எஞ்சிய 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மாநில அரசு நடத்தி வருகிறது.

2023-24-ம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.

இதில், அகில இந்திய கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 3 இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள் மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 17 இடங்கள் (நிர்வாக ஒதுக்கீடு) என மொத்தம் 86 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, அகில இந்திய கலந்தாய்வு முடிவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 51 இடங்கள், மாநில கலந்தாய்வு முடிவில் அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 24 இடங்கள், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 204 இடங்கள் என மொத்தம் 279 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் முடிந்துவிட்டதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காலியாக உள்ள இடங்கள் தமிழகத்துக்கு திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. அதேபோல, மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி முடிந்துவிட்டதால், மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களையும் நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் இடங்கள், 279 பிடிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதிய கடிதம்:

ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் விரும்பத்தக்கது மற்றும் மதிப்புமிக்க தேசிய வளம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த இடங்களுக்கு வருவதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, மேலும் கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், இந்த விலைமதிப்பற்ற இடங்களை நிரப்ப முடியும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், இந்த மாணவர்களுக்கு சிறப்பு அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவர்களுக்கு இடமளிக்க முடியும். குறிப்பாக, மாணவர்களுக்கும், பொதுவாக நாட்டுக்கும் பயனளிக்கும் வகையில் உங்களிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்