ஒட்டன்சத்திரம் அருகே ஓட்டுநர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த அதிமுக நிர்வாகி கைது

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகையில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜை வெள்ளிக்கிழமை (அக்.13) சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிகை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (30). இவர் ஒட்டன்சத்திரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ் என்பவரிடம் கார் ஓட்டுநராகவும், அவருக்கு சொந்தமான பால் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆக.17-ம் தேதி மர்மமான முறையில் சுரேஷ்குமார் இறந்தார். அவரது உடலை, அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் (44), அம்பிளிகை மயானத்துக்கு கொண்டு சென்று இரவோடு இரவாக எரித்தார். இது குறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் அம்பிளிகை போலீஸில் புகார் அளித்ததன் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.

இந்நிலையில் ஆக.21-ம் தேதி வடிவேல் (44), ஓடைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகையப்பனிடம் சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமார் பணிபுரிந்த இடத்தில் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்தார். அதனால் அவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்தோம் என ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை அம்பிளிகை போலீஸார் கைது செய்தனர். மேலும் சிலரை தனிப்படை அமைத்து தேடினர்.

இந்நிலையில் கடந்த 2 மாதமாக தலைமறைவாக இருந்த அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் என்.பி.நடராஜை (48) வெள்ளிகிழமை (அக்.13) சென்னையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் அழைத்து வந்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இவர் 2021 சட்டசபை தேர்தலில் தற்போதைய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து, அதிமுக சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE