ஒரே நாளில் ரூ.31.30 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: கரூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோயில்களுக்கு சொந்தமான ரூ.31.30 கோடி மதிப்பீட்டிலான நிலங்கள், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூர் மாவட்டம், கரூர், அருள்மிகு கல்யாண பசுபதீசுவர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தோரணக்கல்பட்டியில் அமைந்துள்ள 7 ஏக்கர் 51 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. கரூர் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற உத்தரவின்படி, கரூர் மாவட்ட உதவி ஆணையர் பி.ஜெயதேவி முன்னிலையில் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.22 கோடியாகும்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், திருவாச்சி அருள்மிகு கரிய பெருமாள் கரிய காளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.46 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அடுத்து ஈரோடு மண்டல இணை ஆணையர் உத்தரவின்படி, காவல்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.7.60 கோடியாகும்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாஞ்சியம் கிராமம், அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 16 ஏக்கர் 82 சென்ட் நிலத்தினை 14 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இந்நிலத்தினை நாகப்பட்டினம் மண்டல இணை ஆணையர் வே.குமரேசன் தலைமையில், திருவாரூர் உதவி ஆணையர் ப.இராணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.1.70 கோடியாகும். ஆக மொத்தம் இன்றைய தினம் மீட்கப்பட்ட 3 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.31.30 கோடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE