காமாட்சியம்மன் கோயில் நிலத்தின் போலி கிரய பத்திரம் ரத்து- கோயில் நிர்வாகத்திடம் 64 ஆயிரம் சதுர அடி நிலம் ஒப்படைப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: காமாட்சியம்மன் கோயில் நிலத்தின் போலி கிரயப் பத்திரத்தை ரத்து செய்துள்ள நிலையில் 64 ஆயிரம் சதுரஅடி நிலம் கோயில் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

புதுவை காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டதாக சிபிசிஐடி போலீஸாருக்கு புகார் வந்தது. டிஜிபி உத்தரவின் பேரில் எஸ்பி மோகன் குமார் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இதில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நிலத்தை சென்னையை சேர்ந்த ரத்தின வேல், அவரின் மனைவி மோகன சுந்தரி, மனோகரன், புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனைகளாக பிரித்து விற்றது தெரிந்தது. அம்மனைகளில் சிலவற்றை பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட் வாங்கியதாகவும் புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் முழுமையாக விசாரணை நடத்தி சார் பதிவாளர் சிவசாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில் தார் பாலாஜி உட்பட 17 பேரை கைது செய்தனர். நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கோயில் நிலத்தை மனைப்பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். மனை வாங்கியுள்ள அனைவரின் கிரய பத்திரத்தையும் ரத்து செய்து சொத்தை கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும். சிபிசிஐடி போலீஸார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.

சொத்து மதிப்பு குறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இதனை 6 வார காலத்திற்குள் செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணியை அரசின் வருவாய்துறை தொடக்கியது. மாவட்ட நிர்வாகம் கோயில் நிலத்தை எடுத்து கோயிலுக்கு ஒப்படைக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

அதன்படி போலி பத்திரத்தை ரத்து செய்து நிலத்தை கோயிலிடம் ஒப்படைக்க பதிவுத்துறைக்கு ஆட்சியர் வல்லவன் உத்தரவிட்டார். கோயில் நிலம் வீட்டு மனைகளாக்கி விற்ற பத்திரம் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, கோயில் நிலத்தை மீண்டும் காமாட்சியம்மன் கோயில் நிர்வாகக் குழுவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று ரெயின்போ நகரில் நடந்தது.

பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவசங்கரன், சிபிசிஐடி போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயில் நிர்வாகக் குழுவிடம் நிலத்தை முறைப்படி ஒப்படைத்தனர். இந்நிகழ்வில் கோயில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். அப்போது அமைச்சர் லட்சுமி நாராயணனும் இந்நிகழ்வின் போது அங்கிருந்தார்.

ஒப்படைத்த பிறகு மாவட்டப் பதிவாளராக கந்தசாமி கூறுகையில், "இரண்டு சொத்துகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம். அதற்கான சான்றுகளை பெற்றுள்ளோம். இரண்டு சர்வே நம்பர்கள். இது மொத்தம் 64 ஆயிரம் சதுர அடி. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அளவீடு செய்யப்பட்டு கோயில் சொத்தை நிர்வாகத்திடம் ஒப்படைத்தோம்.

பெரும்பாலானவை காலியிடம் தான். சில இடங்களில் காலியிடம், முழு வீடு இருக்கு, ஒரு இடத்தில் பகுதி கட்டுமானம் இருக்கும். அங்கு நோட்டீஸ் தந்துள்ளோம். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சிபிசிஐடி, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தோம். " என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE