விவசாயிகளைக் காக்க அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கிட வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவிவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப் பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு அவர்களின் துயரைத் துடைப்பதை விட, அதிகரிக்கும் வகையில் தான் உள்ளது. ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப் பட்டிருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் உழவர்களுக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி, கடலூர், விழுப்புரம், மேற்கு மாவட்டங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை அனைத்து மாவட்டங்களிலும் இதே அளவில் தான் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இழப்பீடு உழவர்களால் செலுத்தப்பட்ட காப்பீட்டு பிரிமியத் தொகையை விட மிகவும் குறைவு ஆகும்.

நடப்பாண்டில் தான் உழவர்களுக்கு மிகக்குறைந்த தொகை காப்பீடாக வழங்கப்படுகிறது என்று கூற முடியாது. 2021-22 ஆம் ஆண்டிலும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களில் 90 விழுக்காட்டினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. மீதமுள்ள 10 விழுக்காட்டினரில் கூட பெரும்பான்மையினருக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டும் தான் இழப்பீடு வழங்கப்பட்டது. இயற்கை சீற்றத்தால் பயிர்கள் பாதிக்கப்படும் போது, அதனால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்பில் ஒரு பகுதியையாவது ஈடு செய்ய வேண்டும் என்பதற்காகவே பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், காப்பீட்டுக்காக செலுத்தப்படும் தொகை கூட உழவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படுவதில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும்.

தனியார் பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் உழவர்களை பாதுகாப்பதை விட அவர்களை சுரண்டுவதில் தான் கவனம் செலுத்துகின்றன. அதற்கு 21.09.2023-ஆம் நாளிட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும். 2022-23 ஆம் ஆண்டில், 24.45 லட்சம் ஏக்கர் நிலங்கள் பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப் பட்டன. அதற்காக செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் ரூ.2319 கோடி ஆகும். இதில் ரூ.1375 கோடியை தமிழக அரசும், ரூ.824 கோடியை மத்திய அரசும், ரூ.120 கோடியை உழவர்களும் செலுத்தியிருக்கின்றனர்.

அதாவது ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.9,484 காப்பீடாக செலுத்தப்படுகிறது. பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதை விட மும்மடங்கு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்பது விதி. அதாவது மூன்றில் ஒரு பங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டு அவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் வருவாய் இழப்பு ஏற்படாது என்பது தான் கணக்கு.

ஆனால், 2022-23 ஆம் ஆண்டில் காப்பீட்டு பிரிமியமாக ரூ.2319 கோடி வசூலித்த காப்பீட்டு நிறுவனங்கள், அதில் சுமார் 20%, அதாவது ரூ.560 கோடி மட்டுமே இழப்பீடாக வழங்கியிருக்கின்றன. மீதமுள்ள ரூ.1759 கோடியை பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றுக்கான லாபமாக சுருட்டிக் கொண்டன. 2022-23 ஆம் ஆண்டில் 24.25 லட்சம் ஏக்கர் சம்பா நெல் காப்பீடு செய்யப்பட்ட நிலையில், அவற்றில் சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.32,500 என்ற அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட்டால் கூட, காப்பீட்டு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படாது. ஆனால், தங்களுக்கு அளவுக்கு அதிகமாக லாபம் ஒதுக்கும் நிறுவனங்கள், உழவர்களை கண்ணீரில் ஆழ்த்துகின்றன.

2021-22 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் சம்பா நெற்பயிர்களுக்கான காப்பீட்டு பிரீமியமாக ரூ.2413 கோடி வசூலிக்கப்பட்ட நிலையில், உழவர்களுக்கான இழப்பீடாக ரூ.481 கோடி மட்டும் தான் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு கிடைத்த லாபத்தின் அளவு மட்டும் ரூ.1932 கோடி ஆகும். இப்படியாக ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தான் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கிறதே தவிர, உழவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படுவதில்லை.

கடந்த ஐந்தாண்டுகளில் பயிர்க்காப்பீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்தால், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் என்பது உழவர்களுக்கானது அல்ல.காப்பீட்டு நிறுவனங்களுக்கானது தான் என்பதை புரிந்து கொள்ள முடியும். காப்பீட்டுத் திட்டம் என்பது அதை செயல்படுத்தும் நிறுவனங்களின் நலனுக்காக இருக்கக்கூடாது; உழவர்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு, காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசே பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும்; அதன் மூலம் உழவர்களைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்