பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு பாரம்பரிய புறப்பாடு: தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க, பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் புறப்பட்டுச் சென்றன. இரு மாநில போலீஸார் அணிவகுப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.

நடப்பாண்டு நவராத்திரி விழா வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக பத்பநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி சிலைகள் புறப்பாடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிலைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இரு மாநில போலீஸாரும் அரண்மனை வாயிலில் அணிவகுத்து நின்றனர். மேலும், பத்மநாபபுரம் அரண்மனையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. அரண்மனை நிர்வாகிகள் உடைவாளை எடுத்து, தொல்லியல் துறை இயக்குநர் தினேஷிடம் ஒப்படைத்தனர். அவர் கேரளதேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடமிருந்து குமரி மாவட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன் உடைவாளைப் பெற்றுகொண்டார்.

நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், குமரி மாவட்ட ஆட்சியர் தர், விஜய் வசந்த் எம்.பி., மற்றும் தமிழக, கேரள மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

போலீஸார் அணிவகுப்பு: இந்த ஊர்வலத்துக்கு தமிழக, கேரள போலீஸார் அணிவகுத்துச் சென்று, மரியாதை செலுத்தினர். பல்லக்குகளுக்கு முன்னதாக, மன்னரின் உடைவாள் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து, யானை மீது சரஸ்வதி தேவியும், பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று, மலர்கள் தூவி சுவாமி சிலைகளை கேரளத்துக்கு வழியனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE