லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி, அமலாக்கத் துறை சோதனை @ கோவை

By டி.ஜி.ரகுபதி 


கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (அக்.12) இணைந்து சோதனை நடத்தினர். அதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா உள்பட பல மாநிலங்களில் லாட்டரி விற்பனை சில விதிகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கோடிக் கணக்கில் பணம், தங்கம், வைரம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், லாட்டரி தொழிலில் கிடைத்த சுமார் ரூ.910 கோடியை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அவர் வாங்கி குவித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மார்ட்டின் மற்றும் மேலும் சிலர் மீது வழக்குப் பதியப்பட்டது.

தொழில் அதிபர் மார்ட்டின் தொடர்புடைய சுமார் ரூ.451 கோடி மதிப்புடைய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கியுள்ளது. பின்னர், கடந்த மே மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன், குடும்பத்தினர் மற்றும் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் இணைந்து கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று சோதனை நடத்தினர். கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகேயுள்ள, வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீடு, அருகே உள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி, காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்தது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது. 4 இடங்களில் நடந்த சோதனையில், அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர். சோதனையின்போது பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் விபரங்களை வெளியிடவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE