“கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் ரூ.1600 கோடி கேட்டுள்ளோம்” - புதுச்சேரி முதல்வர்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்காக ரூ.1600 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். நல்ல குடிநீர் தொடர்ந்து கிடைக்க இம்முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த எத்திட்டத்திலும் பயன் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் விழா கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. துறை இயக்குநர் முத்துமீனா வரவேற்றார். அமைச்சர் தேனீஜெயக்குமார் தலைமை வகித்தார். தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “கடல் அரிப்பு அதிகரித்துள்ளது. காலாப்பட்டின் மிகப்பெரிய குறை இதுதான். பிள்ளைச்சாவடி பகுதிகளில் 2 மீ வரை தண்ணீர் வருகிறது. காலாப்பட்டில் கல் கொட்ட ரூ.56 கோடி செலவிட திட்டமிட்டு விரைவில் பணிகள் முழுவதும் நடந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர் ஆலோசனை கேட்டு பணிகளைத் துவங்க உள்ளோம்.

எப்பயனும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் திட்டத்தில் 70 ஆயிரம் குடும்பங்கள் கண்டறியப்பட்டன. படிப்படியாக ஒவ்வொரு தொகுதி தோறும் கொடுத்து வருகிறோம். மாதந்தோறும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். கேஸ் சிலிண்டர் மானியம் சிவப்பு ரேஷன் அட்டைதாரருக்கு ரூ.300-ம், மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு ரூ.150-ம் பதிவு செய்த பயனாளிகளுக்கு 19,100 பேரின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம். மேலும், பதிவு செய்து வரும் 40 ஆயிரம் பேருக்கு அடுத்தக்கட்டமாக செலுத்தவுள்ளோம். பதிவு செய்யதால் மொத்தம் 1.7 லட்சம் பேருக்கு தரப்படும். சிலிண்டர் மானியம் தர ரூ. 8 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம்.

அதேபோல் 200 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் செலுத்தியுள்ளோம். விபத்து காப்பீடு திட்டம் தொடங்கி விட்டோம். அடுத்த மார்ச் மாதம் வரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே நான்கு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம்.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் ரூ.1600 கோடி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இந்த ஆண்டு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல குடிநீர் தொடர்ந்து கிடைக்க இம்முடிவு எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அந்நிதியை பிரதமர் மோடி ஒதுக்கி தருவார். நல்ல குடிநீர் கிடைக்கும். கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கைவிட்டுவிட்டோம். அதற்கு பதிலாக இத்திட்டத்தை துவக்கவுள்ளோம்.

அறிவித்து செயல்படுத்த வேண்டிய திட்டமாக லேப்டாப் தரும் திட்டம் இருந்தது. மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க டெண்டர் முடிவு செய்தோம். இறுதி செய்யப்பட்டு விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு தர வேண்டும். ஒரு வாரத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE