சென்னை: தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்கான முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.12) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக, தமிழக அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வரையாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கினார்.
"வரையாடு" என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் "நீலகிரி வரையாடு" என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. இந்த மலை ஆடுகளை "மவுண்டன் மோனார்க்" என்று அழைக்கிறார்கள்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தின் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியில், நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பதினெண்மேல்கணக்கு நூல்களான நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை போன்ற நூல்களில் நீலகிரி வரையாடு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
» தமிழக இளைஞர்களுக்கு கட்டணமில்லா கோடிங் பயிற்சி - சென்னை ஐஐடி தொடக்கம்
» ''தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு'' - என்கவுன்ட்டர் குறித்து ஆவடி காவல் ஆணையர் விளக்கம்
கி.பி 1600-1700-இல் திரிகூடராசப்பக் கவிராயரால் எழுதப்பட்ட குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தில் நீலகிரி வரையாடு குறித்து "குறத்தி மலை வளம் கூறல்" என்ற பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும். தமிழகத்தில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துக்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி வரையாடு திட்டமானது, நீலகிரி வரையாடு பற்றிய எண்ணிக்கை, விநியோகம் மற்றும் சூழலியல் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குதல்; நீலகிரி வரையாட்டின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல்; நீலகிரி வரையாட்டுக்கு உள்ள அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல்; "நீலகிரி வரையாடு" இனங்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்கச் செய்தல்; நீலகிரி வரையாடு தினம் - 1975 இல் நீலகிரி வரையாடு பற்றிய முதல் ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஈ.ஆர்.சி டேவிதாரின் பிறந்த நாளான அக்டோபர் 7 ஆம் நாள் நீலகிரி வரையாடு தினமாக அவரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
"நீலகிரி வரையாடு" உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்; பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கும் வகையில் டிசம்பர், 2022ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இந்தத் திட்டம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல், வரையாடுகளின் வரம்பு முழுவதும் தரப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்தி ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் நடத்துதல், நீலகிரி வரையாட்டினை மறு அறிமுகம் செய்தல் மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட வரையாடுகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், பணியாளர்களுக்கு கள உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், மேல் பவானியில் உள்ள சோலா புல்வெளியில் முன்னோடியான மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளுதல், சூழல் - சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் எல்லை போன்றவை குறித்த முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்.
நீலகிரி வரையாடு திட்டப்பணிகளை செயல்படுத்த திட்ட அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு முழு நேர முதல் திட்ட இயக்குனரையும் அரசு நியமித்து ஆணை வெளியிட்டு, பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நான்கு முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஒரு மூத்த விஞ்ஞானியையும் நியமனம் செய்துள்ளது.
இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வீ. நாகநாதன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் எஸ்.ராமசுப்ரமணியன், கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் என்.ஜெயராஜ், நீலகிரி வரையாடு பற்றிய குறும்படத்தை தயாரித்த பிரவீன் சண்முகானந்தம் மற்றும் தனுபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago