காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்: அமைச்சர் துரைமுருகன்

By செய்திப்பிரிவு

சென்னை: "காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழகத்துக்கு காவிரியில் அக்.30-ம் தேதி வரை விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் போகிறோம்" என்றார்.

அப்போது, நேற்றைய கூட்டத்திலும் தமிழகத்துக்கு 16,000 கனஅடி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தோம். என்ன காரணத்தால், 3,000 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 28.9.2023 முதல் அடுத்த 15 நாட்களுக்கு, 3000 கனஅடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே கூறியிருந்தனர். அது கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்டதால், 18 நாட்களில் 4,664 கனஅடி தண்ணீர் வந்தது.

நேற்று வரையில், தமிழகத்துக்கு 4.21 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளது. இன்னும் தமிழகத்துக்கு 0.4543 டிஎம்சி தண்ணீர் வரவேண்டியுள்ளது. எனவே, நாளைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க இருக்கிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த தண்ணீரை கா்நாடகா விட்டுக்கொண்டிருக்கிறது" என்றார்.

இன்னும் 110 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அணையை மீண்டும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "தற்போது 8 டிஎம்சிக்கு வந்துவிட்டது. இனிமேல் டெத் ஸ்டோரேஜ் வந்துவிடும். இனிமேல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. காவிரியிலிருந்து 16,000 கனஅடி கொடுத்தால், அணையை திறக்க வாய்ப்பு இருக்கிறது. குடிதண்ணீருக்கு மட்டும் கொடுக்கப்படும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE