அரசு பேருந்து கட்டணம் அதிரடி உயர்வுக்குப் பிறகு, நேற்று சிறிய அளவுக்கு திடீரென குறைக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்தக் கட்டண உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு டீசல் மற்றும் உதிரி பொருட்களின் விலை உயர்வு, இயக்க செலவு, ஊழியர்களின் சம்பள உயர்வு என தமிழக அரசு பல காரணங்களைத் தெரிவித்தது. கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தாக்கம் அதிகம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவு, சொகுசு, ஏசி என பல வகைக் கட்டணங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதிய அளவில் வசதிகள் இல்லாததால் அரசு பேருந்துகளை தவிர்த்து விட்டு ரயில், தனியார் பேருந்து போன்ற மாற்று போக்குவரத்தில் பொதுமக்கள் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘2011-ல் பேருந்து கட்டண உயர்வின்போது, தொடக்கத்தில் 5 சதவீத பயணிகள் புறக்கணித்தாலும், அடுத்த ஓரிரு மாதங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய திரும்பிவிட்டனர். அப்போது கட்டண உயர்வு என்பது கணிசமாகவும் இருந்தது. மேலும், அரசு பேருந்துகளில் போதிய வசதிகளும் இருந்தன. ஆனால், தற்போது கட்டண உயர்வும் அதிகம், பேருந்துகளும் மோசமாக உள்ளன.
இதனால், கட்டணத்தை உயர்த்திய 4 நாட்களில் ஒட்டுமொத்த பயணிகளான 2.2 கோடியில் 10 சதவீதம் பேர் அரசு பேருந்துகளை புறக்கணித்து விட்டனர். மற்றொரு புறம் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கட்டண உயர்வில் மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கணிசமான மக்கள் அரசு பேருந்துகள் பக்கம் மீண்டும் வருவார்கள் என நம்புகிறோம்’’ என்றனர்.
தனியாருக்கு சாதகம்
மற்றொரு தரப்பு போக்குவரத்து அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘அரசு பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு பிறகு இலக்கு நிர்ணயித்தப்படி வருவாய் பெற முடியவில்லை. ஆனால், மக்களின் தேவையை பயன்படுத்திக் கொண்டு தமிழகம் முழுவதும் 5000 தனியார் மற்றும் 3000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் வசூலை குவித்துள்ளன.
அதாவது, அரசு பேருந்துகளில் 55 முதல் 60% கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், மாவட்டங்கள், நகரங்களில் இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் இந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் 30 சதவீதமே உயர்த்தி, குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டன. இதனால், தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வழக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்பேர் (மாற்று) பேருந்துகளையும் இயக்கி வருவாயை பெருக்கிவிட்டனர். இதேபோல், ஆம்னி பேருந்துகளிலும் பயணிகளை ஈர்க்கும் வகையில் எந்த கட்டண உயர்வும் செய்யாமலேயே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழலில் அரசு பேருந்து பயணிகளை தக்கவைத்துக் கொள்ள உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கியும், சேவையில் தரத்தை உயர்த்தவும் முடியாத சூழல் இருக்கிறது.
எனவே, மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், அரசு பேருந்து பயணிகளின் வருவாயை தக்கவைத்துக் கொள்ளவும் தற்போது சிறிய அளவுக்கு கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநகர, நகர பேருந்துகளில் நிலைக்கு (ஸ்டேஜூக்கு) ரூ.1 குறைக்கப்பட்டுள்ளது பெரும்பாலான மக்களுக்கு பேருந்து கட்டண சுமையை இது ஓரளவுக்கு குறைக்கும் என நம்புகிறோம்’’ என்றனர்.
வெறும் கண்துடைப்பு
சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் கூறும்போது, ‘‘அரசு பேருந்துகளில் திடீரென 60% வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போது மிகவும் குறைந்த அளவுக்கே கட்டணத்தை குறைத்திருப்பதை வெறும் கண்துடைப்பாகவே பார்க்கிறோம். மக்களின் பணத்தில் இயங்கும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் வெளிப்படைத் தன்மை அவசியம்.
எனவே, கட்டண உயர்வின்போது, மின்வாரியத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்பது போல், அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அதன்பிறகு, நீதிபதியை தலைமையாகக் கொண்டு செயல்படும் குழுவை அமைத்து கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago