ஒப்பந்த செவிலியர்களாக பணிபுரியும் 499 பேருக்கு நிரந்தர பணி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஒப்பந்த செவிலியர்களாகப் பணிபுரியும் 499 பேருக்கு நிரந்தர செவிலியர்களாகப் பணி வழங்கப்படவுள்ளது. புதிதாக 300 செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படவுள்ளனர் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம் வருமாறு:

தி,வேல்முருகன் (தவாக): எம்ஆர்பி செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் அரசிடம் தெரிவித்தனர். தற்போது டிஎம்எஸ் வளாகத்தில் ஜனநாயக ரீதியாக தங்களுடைய கருத்துகளை வலியுறுத்தினர். அந்தசெவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக): செவிலியர்கள் என்று சொன்னால்மக்கள் மத்தியில் மிகப்பெரிய அனுதாபம் உள்ளது. கரோனாகாலத்தில் எப்படி பணியாற்றினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். பேச்சுவார்த்தை மூலமாக அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அமைச்சரை அனுப்பி தீர்வு கண்டு இருக்கலாம். அவர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

வானதி சீனிவாசன் (பாஜக): வேலைக்காக பெண்கள் தெருவில் இறங்கிப் போராடுவதும், அந்தப் பெண்கள் காவல் துறையினால் தூக்கி செல்லப்படுவதெல்லாம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: போராடும் செவிலியர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல்,அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை திமுக அரசு எடுத்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

ஜி.கே.மணி (பாமக): போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும்.

ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்): செவிலியர்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துதான் போராடுகிறார்கள். அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர்.

இதற்குப் பதில் அளித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

செவிலியர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண முதல்வர் அறிவுறுத்தினார். அதன்படி, உடனடியாக துறையின்செயலாளர் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவர்களை அழைத்து 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தற்போது எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்களை காலமுறை ஊதியத்தில் (நிரந்தரப் பணி)பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 499 பேருக்கு வாழ்வு கிடைக்கவிருக்கிறது.

300 பேர் புதிதாக நியமனம்: கலைஞர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 300 செவிலியர் பணியிடங்களை புதியதாகத் தோற்றுவித்து அதிலும்தொகுப்பூதிய செவிலியர் காலிப்பணியிடங்களை தற்காலிக செவிலியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

யார் எப்போது போராட்டம்நடத்தினாலும் போராட்டம் நடத்தப்படுகின்ற இடத்துக்கு நேரிடையாகச் சென்று அவர்களுடைய போராட்டத்துக்கான காரணங்களைக் கேட்டு, அந்த போராட்டத்தை கனிவோடு இந்த அரசு பரிசீலனை செய்கிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE