சனாதனம் குறித்து உதயநிதி பேசியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது: இந்து முன்னணி தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகஎம்.பி ஆ.ராசா ஆகியோர் சனாதனதர்மத்துக்கு எதிராகப் பேசியிருந்தனர். இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்று இருந்தார்.

இந்நிலையில் இந்த மூவரும் எந்ததகுதியின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகளாக பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் கிஷோர்குமார், ஜெயக்குமார், மனோகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அமைச்சர் உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், அமைச்சர் சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜோதி ஆகியோர் ஆஜராகி இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதிட்டனர்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான டி.வி.ராமானுஜம், மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டிய அமைச்சர் உதயநிதி, மற்றும் திமுக எம்.பி ஆ.ராசா ஆகியோர் சனாதனத்தை ஒழி்க்க வேண்டுமென பேசியிருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. மத சுதந்திரத்துக்கு எதிரானது. அதுமட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற மோசடிகளைச் செய்யஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.இதன்மூலம் பதவிப்பிரமாண உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் மீறிவிட்டதால் அவர்கள்3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும், என காரசாரமாக வாதிட்டார்.

‘அரசியலமைப்பு சட்டத்தின் மீதான மோசடி’ என்ற மனுதாரர் தரப்பு வாதத்துக்கு அமைச்சர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதி இந்த வழக்குவிசாரணையை தொடர் வாதத்துக்காக இன்றைக்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE