மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பேராட்டம்: இன்று முதல் குடும்பநல அறுவை சிகிச்சைகளை நிறுத்த முடிவு

By செய்திப்பிரிவு

மதுரை: மகப்பேறு வார்டில் நுழைந்து மருத்துவர்களை மரியாதை குறைவாக பேசியதாக மாநகராட்சி நகர்நல அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமை வகித்தார். ஐஎம்ஏ (இந்திய மருத்துவச் சங்கம்) மதுரை நிர்வாகிகள் டாக்டர்கள் மகாலிங்கம், அழகு வெங்கடேசன், அமானுல்லா மற்றும் ஐஎம்ஏ உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மருத்துவர்கள், முதுநிலை பட்டப் படிப்பு, இளநிலை பட்டப்படிப்பு மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

அப்போது டாக்டர் செந்தில் பேசியதாவது: மகப்பேறு வார்டில் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களை மரியாதை குறைவாக நடத்தி பணி செய்ய விடாமல் நகர்நல அலுவலர் தடுத்துள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சுமார் ஆயிரம் மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.

மகப்பேறு மருத்துவர் பணியிடங்களை இரட்டிப்பாக்க வேண்டும். அரசு மகப்பேறு மருத்துவர்களை மென்டாரிங் முகாம்கள் போன்றவற்றில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் இறப்பு விவகாரத்தில் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை சம்பந்தமான தணிக்கையை மாநில அளவில் மூத்த மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் உயர்மட்டக் குழுவை கொண்டு முறையாக மேற்கொள்ள வேண்டும்.

மகப்பேறு இறப்பின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கான தணிக்கை மட்டுமே மாவட்ட ஆட்சியர், இணை இயக்குநர், துணை இயக்குநர்களை கொண்டு நடத்த வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள ஆறு விதமான தணிக்கைகளை மாற்றி ஒரு தணிக்கை மட்டும் நடத்தப்பட வேண்டும்.

எங்கள் இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை, அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் மருத்துவர்கள் பதிவுசெய்ய மாட்டார்கள். தணிக்கை கூட்டங்கள், ஆய்வுக்கூட்டங்கள், இன்சூரன்ஸ் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கூட்டங்களும் புறக்கணிக்கப்படும்.

சீமாங் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மருத்துவ அறிக்கைகள் அனுப்புவது நிறுத்தப்படும். இன்று (அக்.12) முதல் அனைத்து அரசு ராஜாஜி மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து நோயாளிகளுக்கு பணி செய்யும் போராட்டம் நடத்தப்படும். இன்று முதல் குடும்பநல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப் போவதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

அரசு மருத்துவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள லட்சக்கணக்கான ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவர். இதனால் தமிழக முதல்வர், சுகாதார அமைச்சர் தலையிட்டு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE