''தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்'' - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில், விதி எண்.110-ன்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய ஒன்றியம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கும், இந்திய மக்களின் பட்டினிச் சாவைத் தடுப்பதற்கும் 1960-களில் பசுமைப் புரட்சித் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவரான மறைந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் அளப்பரிய பணிகளை நினைவுகூரும் வகையில் விதி எண்.110-இன்கீழ் அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன்.

வேட்டைச் சமூகமாக இருந்த மனித இனம், வேளாண் தொழிலைத் தேர்ந்தெடுத்தது என்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதுடன் அறிவியல் வளர்ச்சியின் அடையாளமும் ஆகும். வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்.

தமிழ்நாட்டில் கருணாநிதி ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது கருணாநிதி ஆட்சிக் காலத்து மாடல்தான். இந்தப் பங்களிப்பில் அறிவியலாளர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் ஆலோசனைகளும் இணைந்திருக்கின்றன.

இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டு இருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, காலநிலை மாற்றம் குறித்து 1969-ஆம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989-ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார்.

கருணாநிதி மீது அளப்பரிய அன்பு கொண்டவரான எம்.எஸ். சுவாமிநாதன், கருணாநிதி மறைவின்போது மிக உருக்கமான இரங்கற்குறிப்பையும் பதிவு செய்திருந்தார். தன்னுடைய பெயரிலான எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு முதல்வர் கருணாநிதி நிலம் தந்து உதவியதையும், ஜே.ஆர்.டி. டாடா பெயரிலான சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர். நாராயணனுன் இணைந்து கருணாநிதி திறந்து வைத்ததையும் நன்றிப் பெருக்குடன் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கான உயிரி தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கியவரும் கருணாநிதிதான் என்பதைக் குறிப்பிட்டுள்ள எம்.எஸ். சுவாமிநாதன், கருணாநிதியின் ஆட்சி எப்போதும் உழவர்கள் நலன் நாடும் ஆட்சியாகவே இருந்தது என்பதையும், விஞ்ஞானிகளின் விஞ்ஞானியாக கருணாநிதி திகழ்ந்தார் என்றும் பாராட்டியுள்ளார்.

2021-இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோது, அவருடைய பணிகளைப் பாராட்டிப் பேசினேன். தமிழ்நட்டின் வளர்ச்சிக்கு இன்றயை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், இந்த அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள முதல்வராகிய என்னையும் அவர் பாராட்டி, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அரசின் சார்பில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய அளவில் முத்திரை பதித்து, உலகளவில் புகழ் பெற்றவர். பத்மவிபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்பதைத் தெரிவித்து அமைகிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்