சென்னை: "இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைகளில் தண்டனைக் காலத்தை நிறைவு செய்த இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது வருத்தமளிக்கிறது. அனைத்துக் கட்சிகளின் சார்பில் அழுத்தம் கொடுத்தும் இந்த சிக்கலில் ஆக்கப்பூர்வமான விடையோ, உத்தரவாதமோ அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அதிக அளவாக 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவர். நன்னடத்தை அடிப்படையில் பலர் 7 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டதும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. ஆனால், வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட இஸ்லாமியக் கைதிகள், அவர்களின் தண்டனைக் காலம் நிறைவடைந்தும் கூட, 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் வாடிக் கொண்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் மட்டும் 38 கைதிகள் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர். தண்டனைக் காலத்தை நிறைவு செய்த அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. எனினும் எந்த பயனும் ஏற்படவில்லை.
இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று பாமக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில் நம்பிக்கையளிக்கும் செய்தி இருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்தது. ஆனால், அத்தகைய நம்பிக்கை அளிக்கும் உத்தரவாதம் எதுவும் அரசு சார்பில் அளிக்கப்படவில்லை.
» தொடர் எதிர்ப்பு: ‘லியோ’ ட்ரெய்லரில் திருத்தம் செய்த படக்குழு
» காவிரி விவகாரம்: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!
நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆதிநாதன் குழு, ஒட்டுமொத்தமாக 264 கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்தது. ஆனால், அவர்களில் 49 பேரை மட்டுமே, முதல்கட்டமாக, விடுதலை செய்ய ஆளுனருக்கு தமிழக அரசு பரிந்துரைத்திருக்கிறது. அவர்களில் 20 பேர் இஸ்லாமியர்கள் என்பது மனநிறைவளிக்கும் செய்தியாகும். அவர்களை விடுதலை செய்வதற்கான பரிந்துரை ஆகஸ்ட் 28ம் நாள் அனுப்பப்பட்டு, 45 நாட்களாகியும் இதுவரை ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அது தொடர்பாக அரசின் சார்பில் ஆளுநருக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்பது தான் கூடுதல் வருத்தமளிக்கிறது.
ஆளுநருக்கு பரிந்துரை அளித்ததுடன் தங்களின் பணி முடிவடைந்து விட்டது என்பதைப் போல, இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுத்த பிறகு இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட 49 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். கைதிகளை விடுதலை செய்ய ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கவில்லை.
தமிழகத்துக்கு கடந்த பத்தாண்டுகளாக ஆளுநர்களாக வருபவர்கள், தண்டனைக் காலத்தை முடித்த கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யும் விஷயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மை தான். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த 09.09.2018 ஆம் நாள் அமைச்சரவைத் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த போதிலும் கூட அப்போதிருந்த ஆளுநர் அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த அநீதி நடந்தது. அதன்பிறகு பேரறிவாளனே உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி 1346 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில் விடுதலை செய்யப்பட்டார்.
இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 49 கைதிகள் விடுதலை விவகாரத்திலும், அரசுத் தரப்பில் அழுத்தம் கொடுக்கப் படாவிட்டால், அவர்களின் விடுதலைக்கான பரிந்துரை ஆளுநர் மாளிகையின் அலமாரிகளில் உறங்கிக் கொண்டே தான் இருக்கும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமியக் கைதிகளின் விடுதலை கானல் நீராகவே இருக்கும். அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் அவர்களுக்கு நீதி வழங்க முடியும்.
எனவே, உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட 264 கைதிகளில், ஏற்கெனவே ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்ட 49 பேர் தவிர மீதமுள்ளவர்களையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூத்த அமைச்சர்கள் குழுவினர் ஆளுநரை நேரில் சந்தித்து இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட நீண்ட காலமாக சிறைகளில் வாடும் 264 பேரின் விடுதலை குறித்து விரைந்து முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும். ஆளுநர் தரப்பில் தாமதம் செய்யப்பட்டால், அவர்கள் அனைவரையும் நிபந்தனை இல்லாத சிறை விடுப்பில் அவர்களின் இல்லங்களுக்கு அனுப்ப வேண்டும்", என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago