சுய விவரங்களை புதுப்பிக்காத குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது: பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சுய விவரங்களை புதுப்பிக்காத குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படாது என்று சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார். சட்டப்பேரவையில் முதல் துணை மதிப்பீடுகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில் ஆளூர்ஷா நவாஸ் (விசிக), பா.சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர்.

இதைத் தொடர்ந்து, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் 5 கிலோ அரிசி வழங்குகிறது. இந்த நிலையில், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை புதுப்பிக்கும் வகையில், ‘இணையவழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள்’ (‘இ-கேஒய்சி’) என்ற முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி, குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பொது விநியோக திட்ட அங்காடியில் உள்ள கருவியில் கைவிரல் ரேகை அல்லது கருவிழி பதிவு மூலம் தங்கள் விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டு, 45 சதவீத குடும்ப அட்டைதாரர் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் இப்பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஓய்வாக இருக்கும்போதோ, பொருட்கள் வாங்க கடைக்கு வரும்போதோ கைவிரல் ரேகை பதிவு மூலம் புதுப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

‘குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தால்தான் பொருட்களை பெற முடியும்’ என சில இடங்களில் தவறுதலாக கூறியுள்ளனர். இதை கேள்விப்பட்டதும், அவ்வாறு செய்ய கூடாது என அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப இந்த விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு இயலாவிட்டால், இதற்காக சிறப்பு முகாம் நடத்தவோ, வீட்டுக்கே சென்று புதுப்பிக்கவோ நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE