காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்பதுபோல காட்டிக்கொள்ள வேண்டும்: திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்ப்பதுபோல காட்டிக்கொள்ள வேண்டும்என்று திமுக மாவட்ட துணைச்செயலாளர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் இன்று (அக்.11) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், கடந்த 7-ம் தேதிமயிலாடுதுறையில் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தலைமை வகித்தார்.

இதில், காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் திமுக மாவட்டதுணைச் செயலாளர் மு.ஞானவேலன் பேசியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் ‘‘அவர்கள் (கர்நாடகாவில்) எப்படி காங்கிரஸ்காரர்களை வைத்துக்கொண்டு நடிக்கின்றனரோ, அதேபோல (கர்நாடக) காங்கிரஸை எதிர்ப்பதுபோல காட்டி, எடப்பாடியை (பழனிசாமியை) மட்டம் தட்டுவதுபோல காட்டி, பாஜகவை ஒழிக்க வேண்டும். அதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். அப்போதுதான் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற முடியும்.

காங்கிரஸ் அங்கே தண்ணீர் திறந்து விடுகிறது, அதை தடுக்கிறார்கள் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். ஆனால், நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும். மாயையை ஏற்படுத்த வேண்டும். இங்குள்ள ராஜகுமார் எம்எல்ஏ (காங்கிரஸ்) கடுமையாகப் பேச வேண்டும். இங்குள்ளவர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து, தலைவருக்கு பின்னால் நிற்கிறார்கள். எதற்காகவும் காங்கிரஸ்காரர்கள் போராடுவார்கள் என்ற உணர்வு மக்களிடம் வரவேண்டும். எனவே, ராஜகுமார் கடுமையாகப் பேச வேண்டும்.

கர்நாடக மாநிலத்தவர் கன்னட உணர்வோடு இருப்பதுபோல, இங்குள்ள தமிழர்கள், தமிழ் உணர்வோடு உள்ளார்கள் என்பதைக் காட்ட வேண்டும். அதுதான் இந்தஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்” என்றுபேசியுள்ளார்.

வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதுபோல திமுக நடிப்பதாகவும், காவிரி விவகாரத்தில் நாடகமாடி வருவதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

‘தவறாகப் பேசவில்லை’: இதுகுறித்து மு.ஞானவேலன் ‘இந்து தமிழ்’ நிருபரிடம் நேற்றுகூறும்போது, “அந்தப் பேச்சில்தவறு ஏதுமில்லை. முழுமையாக பேச்சைக் கேட்டால் புரியும். தேவையில்லாமல் அரசியலுக்காக இதைப் பரப்புகின்றனர். எங்களுடன் வந்துகாங்கிரஸ்காரர்களும் போராட வேண்டும் என்றுதான் சொன்னேன். அங்குள்ள காங்கிரஸ்காரர்களைப்போல இங்குள்ள காங்கிரஸ்காரர்கள் தமிழ் உணர்வுடன், இணைந்து போராட வேண்டும் என்றுதான் சொன்னேன். பேச்சை தவறாக திரித்து, எனதுநற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE