வேப்பனப்பள்ளி அருகே பந்திகுறியில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே பந்திகுறி கிராமத்தில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது: பருவ நிலை மாற்றத்தால் பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில், பள்ளியின் அருகே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கழிவுநீர் தேங்கி அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. மேலும், அண்மையில் பெய்த மழை நீரும், கழிவுநீருடன் கலந்துள்ளது.

பள்ளி மாணவ, மாணவிகள் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 3 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் இருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மேலும், மூதாட்டி ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது.

இதேபோல கிராமத்தில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாயும் முறையாகக் கழிவு அள்ளப்படாமல் கழிவுநீர் தேங்கி வருகிறது. நாங்கள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை தொடர்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள் கிராமத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாக்கடை கால்வாயில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் அடைப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும். சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி காய்ச்சல் பாதிப்பை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE