7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய ரயில்வேயில் ஓட்டுநர் காலி பணியிடங்களை நிரப்பாததால், பணிச்சுமை அதிகரித்து வருகிறது. எனவே, ரயில் ஓட்டுநர்கள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் (ரயில் ஓட்டுநர்கள்) சங்கம் சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருச்சி,மதுரை, சேலம் உள்பட 6 கோட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட ரயில் ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து, அகில இந்திய லோகோ ஓடும் தொழிலாளிகள் சங்கத்தின் மத்திய அமைப்புச் செயலாளர் பாலச்சந்திரன், இணைசெயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் கூறியதாவது: ரயில் ஓட்டுநர்களுக்கு 10 மணி நேரத்துக்குமேல் பணி இருக்காது என மத்திய அரசுதரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் 14,15 மணி நேரமாக இருக்கிறது. இதனால், பணிச்சுமை அதிகரித்து ரயில் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பயணிகள் ரயில்களில் ஓட்டுநர்பணி நேரத்தை 6 மணி நேரமாகவும், சரக்கு ரயில்களில் 8 மணிநேரமாகவும் குறைக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், பெண் ஓட்டுநர்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது கோரிக்கை குறித்து, தெற்கு ரயில்வேயிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE