மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம்: விரைவில் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் உதயநிதி தகவல்

By செய்திப்பிரிவு

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்து சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் நேற்று கொண்டுவரப்பட்டது. அப்போது நடந்த விவாதம்:

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 கொடுக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெண்கள் ஒரு கையில் குழந்தையை வைத்துக் கொண்டும், ஒரு கையில் செல்போனை வைத்துக் கொண்டும் எங்களுக்கு இன்னும் குறுஞ்செய்தி வரவில்லை என்கின்றனர்.

உரிமைத் தொகை ஏழை மக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் வசதி படைத்த குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகை பெற்றிருப்பதாக தகவல் வருகிறது.

பேரவைத் தலைவர் அப்பாவு: உரிமைத் தொகை 1.06 கோடி பேருக்கு கொடுக்கப்படுகிறது. எங்கும் எனக்கு கொடுக்கவில்லை. என்னைவிட வசதியானவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உரிமைத் தொகையை ஒரு கோடி பேருக்கு குறையாமல் கொடுப்போம் என்று ஆரம்பத்தில் சொன்னோம். 1.06 கோடி பேருக்கு உரிமைத் தொகை கொடுக்கப்படுகிறது. தகுதியிருந்தும் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவித்திருக்கிறோம். மேல்முறையீடு செய்து வருகின்றனர். இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

அதனையும் பரிசீலனை செய்து உரிமைத் தொகை கொடுக்கப்படும். தகுதியிருந்தும் எனக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று உங்களிடம் தெரிவிப்பவர்களின் விவரங்களை எங்களிடம் கொடுத்தால், நிச்சயமாக உரிமைத் தொகை வழங்கப்படும். அவர்கள் அதிமுக அல்லது வேறு கட்சி என்று பார்க்க மாட்டோம். எந்த கட்சியாக இருந்தாலும் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்: திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரவைத் தலைவர் அப்பாவு: உங்கள் வீட்டுக்கு மாதம் ரூ.1,000 வேண்டுமா? மனசாட்சியை தொட்டு பேசுங்கள். சாமானிய மக்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார்: எங்கள் ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் குடும்ப அட்டை வைத்துள்ள 2.18 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: பொங்கல் என்பது ஆண்டுக்கு ஒரு முறை. உரிமைத் தொகை என்பது மாதந்தோறும். அதனால்தான் தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் வந்தபோது நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால் உடனே உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கியிருப்போம். தகுதியானவர்களை கண்டறிய தாமதம் ஏற்பட்டது. குறைகள் இருந்தால் ஆதாரத்தோடு சொல்லுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கேளுங்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: உரிமைத் தொகை 1 கோடியே 6 லட்சத்து 198 மகளிருக்கு கொடுக்கப்படுகிறது. நிபந்தனைகளை தளர்த்தியதால் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் 2 லட்சத்து 6 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும், முதியோர் உதவித்தொகை பெறும் 4 லட்சத்து 72 ஆயிரம் பேரின் குடும்பத்தினரும் உரிமைத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர். பொதுவாக எந்த திட்டத்திலும், திட்டப் பயனாளிகள் தேர்வு குறித்து மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை இருக்காது. ஆனால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 24 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இந்தமனுக்களை சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்து, நவ.30-க்குள் உரிய தீர்வை அளிப்பார்கள். ஏற்கெனவே விண்ணப்பிக்காதவர்களும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்