மதுரை | தமுக்கம் மைதானத்தில் 12-ம் தேதி முதல் புத்தகத் திருவிழா

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை தமுக்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ‘புத்தகத் திருவிழா’ நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 12-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் ‘புத்தகத் திருவிழா - 2023’ நடைபெறவுள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர்.

புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெறுகின்றன. அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிறப்பு அரங்குகளில் தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை குழந்தைகளுக்கான ”சிறார் சினிமா”, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் ”கதை கதையாம் காரணமாம்” போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதேபோல, தினந்தோறும் மாலை 4 மணி முதல் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், மாலை 5.00 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடைபெற உள்ளன. புத்தகத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE