“தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை” - அண்ணாமலை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று (அக். 10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தது. “தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கு எங்களை தயார் செய்து கொள்கிறோம். அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் வருவார்கள், பார்வையிடுவார்கள். குறிப்பிட்ட 9 தொகுதிகள் என தனிக் கவனம் இல்லாமல் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் கவனம் செலுத்துவோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் நாட்கள் அதிகம் உள்ளது. அரசியல் சூழல் மாறலாம். களச் சூழலும் மாறலாம். எதிர்வரும் ஐந்து மாநில தேர்தல் முக்கியம். தமிழகத்தில் அரசியல் ரீதியாக நிறைய பிரச்சினைகளை பாஜக சமாளிக்க வேண்டி உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை.

தமிழகத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வருமான வரி சோதனை மற்றும் அமலாக்கத்துறை சோதனையின் மூலம் பொதுப்பணம், தனிப்பட்ட பணமாக மாறியுள்ளது என்பது தெரிகிறது. மக்களின் வரிப்பணம் தனிநபர் வருமானமாக மாற்றப்படுவது கண்டிக்கத்தக்கது. கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் இந்த நிலை இங்கு மாறும். உதாரணமாக மணல் குவாரி விவகாரத்தில் தமிழக அரசு இயந்திரமே வரி எய்ப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த சோதனைகளின் பின்னணியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. அதிகாரிகள் சோதனை இடுகின்றனர். அதில் கிடைப்பதை மக்களிடம் தெரிவிக்கிறார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE