பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராடிய செவிலியர்கள் கைது: மார்க்சிஸ்ட், தேமுதிக கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: பணி நிரந்தரம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவ தேர்வு ஆணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற செவிலியர்கள், கடந்த அதிமுக ஆட்சியின் போதே தங்களை நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து போராடி வந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் அறிவித்து அதற்காக கூடியபோது அவர்களை தடுத்து நிறுத்தி காவலர்கள் கைது செய்துள்ளனர். தமிழக அரசாங்கம் உடனடியாக செவிலியர்களோடு பேசுவதுடன் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் பணிக்கு எடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு முதலில் பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியின் இந்த மோசமான முடிவுக்கு எதிராக செவிலியர்கள் போராட்டத்துக்கு தள்ளப்பட்டனர். அதற்கு பின்னரும், கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் செவிலியர்கள் கடும் பணியாற்றினர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுகவின் தேர்தல் வாக்குறுதி அடிப்படையில் எம்ஆர்பி செவிலியர்கள் நிரந்தர பணி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில், இரண்டாம் கட்ட செவிலியர் பணி நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே இன்றைய போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்ட ஆண் காவலர்கள், போராட்டத்தின்போது கடும் அத்துமீறலில் ஈடுபட்டு செவிலியர்களை கைது செய்துள்ளனர். இந்த போக்கு பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த விதத்திலும் உதவாது. பெருமளவு பெண்கள் பங்கேற்கும் போராட்டத்தை கையாள ஆண் காவலர்களை அனுப்பிய உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி நீட்டிப்பு, கூடுதல் சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்றிட பேச்சுவார்த்தையை தொடங்கிட வேண்டுமெனவும், கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது", என்று அவர் கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: "பணி நிரந்தரம் செய்திடக் கோரியும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 11 புதிய மருத்துவமனைகளில் 2-ம் கட்ட செவிலியர் பணிகளை நிரப்பிடக் கோரியும், கரோனா காலக் கட்டத்தில் காலமுறை ஊதியத்தில் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிவரையறை செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய செவிலியர்களை காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தவுடன் திமுக அரசு யாரையும் கண்டு கொள்ளாமல் அனைவரையும் வஞ்சித்து வருகிறது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுக்க வேண்டும். மேலும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்.

செவிலியர்களைப் போன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் ஹிட்லர் ஆட்சியை போன்று காவல்துறையை வைத்து அவர்களை அப்புறப்படுத்துவது என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவவர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல் மாறிவிடும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்