காவிரி பிரச்சினை: தமிழ்த் திரைத் துறையினருக்கு நடிகை கஸ்தூரி கேள்வி

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: “காவிரி நீர் கொடுக்காத கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும்” என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் பகுதிகளிலுள்ள கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது, "திமுக - காங்கிரஸ் கூட்டாளிகளாக இருப்பதால் காவிரி பிரச்சினையை அவர்கள் தீர்ப்பார்கள் என்பதில் நம்பிக்கையில்லை. காவிரி நீர் கடல் வரைச் சென்று கலக்க வேண்டும். அப்போதுதான் அந்த நதிக்கு ஜீவநதி என்ற பெயர் பொருந்தும். ஆங்காங்கே அணைக் கட்டினால் அந்த நதி குளம், குட்டையாகி இறுதியில் சாக்கடையாக மாறிவிடும்.

கர்நாடகாவில் உள்ள பாஜக உள்பட அங்குள்ள அனைத்துக் கட்சிகள், நமக்குதான் காவிரி சொந்தம் என அங்குள்ள மக்களை நம்ப வைத்துள்ளார். அங்கு படித்தவர்கள் கூட கிருஷ்ணசாகர் அணையைக் கட்டிய விஸ்வரேஸரய்யர் தான் காவிரியை தோண்டி எடுத்தார் என இன்னமும் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் சூழ்நிலையில், வாக்கு அறுவடைக்காக செயல்படும் கர்நாடகா அரசியல்வாதிகளுக்கு நாம் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றோம்.

ஆனால், இண்டியா கூட்டணியிலுள்ள தமிழக முதல்வர், தண்ணீர் தருகிறாயா இல்லை, கூட்டணியை கலைக்கட்டுமா என ஒரு கேள்வி கேட்காமல், திரை மறைவாகச் செயல்படுவோம் என தெரிவித்து வருகிறார். அதனால், காவிரி நீர் பிரச்சினைக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

தமிழகத் திரைத் துறையில் இன்று சில விநியோகஸதர்கள், வியாபாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என தமிழ்த் திரைத்துறையினர் காவிரி பிரச்சினையில் ஈடுபடாமல் இருக்கின்றார்களா எனத் தெரியவில்லை. காவிரிக்காக குரல் கொடுத்த நடிகர் சத்யராஜ் போன்றவர்கள், தமிழக முதல்வருக்கு, போனில் தொடர்பு கொண்டால் சுலபமாக காவிரி பிரச்சனையை முடித்து விடலாம். ஆனால், அவர்கள் ஏன் செய்யவில்லை என எனக்குத் தெரியும், இருப்பினும் தெரியவில்லை என்று தான் நான் கூற முடியும்.

வாக்குக்காக பணம் வாங்குங்கள்; ஆனால் எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறும் அரசியல்வாதிகளுக்கு நமது பிரதான பிரச்சினையைக் கூட பேசத் திராணி இல்லாதவர்களாக இங்கு இருக்கின்றார்கள்.

நடிகர் சித்தார்த் திமுக - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் அவமானப்படுத்தப்பட்டபோது, அந்தக் கட்சியினர் கைவிட்டு விட்டனர். அவர் தமிழகத்துக்காகவும், காவிரிக்காகவும் குரல் கொடுத்திருந்தால், அவரது படத்தை இங்குள்ளவர்கள் பார்வையிட்டு அவரை கொண்டாடியிருப்பார்கள். தற்போது திரைத் துறையில் மத, சாதிய ரீதியாக பிளவுகள் ஏற்பட்டு வருகிறது. லியோ படத்தில் நடிகர் விஜய் பேசியுள்ள வசனத்தை அவர் பேசியிருக்க கூடாது.

இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை கர்நாடகா மாநில எல்லையில் நடத்தி, அவர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், அனுப்பப்படும் உணவுப் பொருட்களை மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வணிக செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE