சென்னை: அதிமுக ஆட்சியில்தான் இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்யப்பட்டன. ஆனால், இஸ்லாமியர்கள் குறித்து அதிமுக பேசினால் முதல்வருக்கு எரிச்சல், கோபம் வருவது ஏன்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்.10) காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ், "சமாதான திட்டத்தின் கீழ் வரி மதிப்பீட்டு ஆண்டில், ரூ. 50,000-க்கும் குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவைத் தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். அரசின் இந்த முடிவால், 1 லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 602 சிறு வணிகர்கள் பயனடைவார்கள்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள். தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்விடுதலை செய்த அதிமுக ஆட்சியில், ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை" என்று பேசினார்.
இதற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க, சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை எனக்கூறி அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், சட்டப்பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்புத் தீர்மானம் இன்றைக்கு பேரவையில் எடுக்கப்பட்டு, அந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திலே நான் சில கருத்துகளை அதிமுக சார்பில் பேசினேன். அப்போது, 1998ம் ஆண்டு பிப்.14 அன்று, கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர், பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையும், 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ளனர். மொத்தம் 36 இஸ்லாமியர்கள், 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் 15.11.2021 அன்று போடப்பட்ட அரசாணையால் இவர்கள் முன்விடுதலையாவது தடைபட்டது என்று இஸ்லாமிய அமைப்புகள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
» 20 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு பரிந்துரை: சிறப்பு கவன ஈர்ப்புக்கு முதல்வர் பதில்
» ஆப்கன் நிலநடுக்கம் | பலி எண்ணிக்கை 4,000 ஆக உயர்வு; 2,000 வீடுகள் தரைமட்டம்
இவர்களில் சிலர் உடல்நலக்குறைவு காரணமாக சிறையிலேயே உயிரிழந்துள்ளனர். தற்போது ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய சிறைவாசிகள், சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களின் வயதுமூப்பு, உடல்நலக்குறைவு, மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பேசினேன்.
இந்த கேள்விக்கு முதல்வர் பதில் அளிக்கும்போது, திடீரென்று அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கறை வந்தது? என்று ஒரு கேள்வி எழுப்பினார். அதோடு மட்டுமின்றி, இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு, ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் அவர் வைத்தார். அதற்குத்தான் நான் பதிலளிக்க முற்பட்டேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் நான் பதில் சொல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதைக் கண்டித்து நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
ரமலான் நோன்புக்காக ஆண்டுதோறும் 5400 டன் அரிசி வழங்கியது அதிமுக அரசு. அதேபோல், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு கொடுத்து வந்த ரூ.6 கோடி நிறுத்தப்பட்டது. அதை உயர்த்தி ரூ.8 கோடியாக வழங்கியதும் அதிமுக அரசுதான். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் தங்கிச் செல்வதற்கான ஹஜ் இல்லம் கட்டியதும் அதிமுக அரசாங்கம்தான். உலாமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான். நாகூர் தர்ஹா குளக்கரையை சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுத்தது, இப்படி பல திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியது அதிமுக அரசு.
முதல்வர், இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறுகிறார். பாதுகாப்பாக இருப்பதை குறைகூறவில்லை. ஆனால், எங்கள் மீது ஏன் முதல்வர் எரிச்சல்படுகிறார்? கோபம் கொள்கிறார்? இஸ்லாமியர்கள் எங்களைச் சந்தித்து, 36 இஸ்லாமிய சிறைவாசிகள் பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்தான் நாங்கள் பேசினோம்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago