20 இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு பரிந்துரை: சிறப்பு கவன ஈர்ப்புக்கு முதல்வர் பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள். ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று (அக்.10) காலை தொடங்கியது. கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறு வணிகர்களுக்கான வணக வரி நிலுவைத் தொகை தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். பின்னர், இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த சிறப்புக் கவன ஈர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்து பேசியது: "ஆயுள் சிறைவாசிகளாக சிறையிலே அடைபட்டிருக்கக்கூடிய கைதிகளை விரைவில் விடுதலை செய்திட வேண்டுமென்ற ஒரு நல்லெண்ணத்தோடு சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திலே இந்த அவையிலே நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் எம்.எச். ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன், சின்னத்துரை, ராமச்சந்திரன், ஜி.கே. மணி, ஜெகன் மூர்த்தி, பூமிநாதன் ஆகிய 9 உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கருத்துகளுக்கு எந்தவித மாறுபாடுகளை, வேறுபாடுகளை நாங்கள் எடுத்துச் சொல்ல தயாராக இல்லை. அவை அனைத்தையும் நாங்கள் முழுமனதோடு, இந்த அரசின் சார்பில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்; காத்திருக்கிறோம்.

ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை தொடர்பாக உரிய விளக்கங்களை இந்த மாமன்றத்துக்கு நான் முதலில் தெரிவிக்க விரும்புகிறேன். தமிழக சிறைவாசிகளில் பத்து ஆண்டுகள் மற்றும் இருபது ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு ஆராய வேண்டுமென்பதற்காகத்தான், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையின்கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு 22.12.2021-ல் இந்த அரசால் அமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் இதுதொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், இவர்களின் வழக்குகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாகவும் இக்குழு அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு தன்னுடைய அறிக்கையினை 28.10.2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் மட்டுமே குழுவால் முன்விடுதலைக்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளினை முன்னிட்டு, “ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு” 11-8-2023 அன்று முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24.8.2023 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை இந்த மாமன்றத்துக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறைக் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக அரசின் சார்பாக மேலும் சில கருத்துக்களை இந்த அவையில் நான் முன்வைக்க விரும்புகிறேன்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மறைந்த முதல்வர் கருணாநிதி ஆகியோரது வழியில் என்றென்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசின் சார்பில், நான் 13.9.2021-ல் அறிவித்தவாறு, அண்ணாவினுடைய 113-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் தண்டனையைக் குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் முன் விடுதலை செய்ய உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதேபோல், அறிவுரைக் கழக (Advisory Board) திட்டத்தின்கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும், மருத்துவக் காரணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி 15 ஆயுள்தண்டனை சிறைவாசிகளும் ஏற்கெனவே முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், 566 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு, 8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். “இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை; அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை” என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் சட்டரீதியான முறைப்படி தமிழக அரசு உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்கு நான் தங்கள் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை பற்றி அதிமுக பேசுவதால், நான் அவர்களைப் பார்த்து ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்? அதை நான் இப்போது அறிய விரும்புகிறேன்.

தருமபுரியில் பேருந்தில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்விடுதலை செய்த உங்களுடைய ஆட்சியில், ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் ஆணவத்தோடு அல்ல; அடக்கத்தோடு நான் கேட்க விரும்புகிற கேள்வி. ஆட்சியில் இருந்த போது இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அதிமுக, இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்