விவசாயிகள் உரிமைக்கு பாஜக துணை நிற்கும்: சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: விவசாயிகளின் உரிமைகளுக்காகவும், நீர் ஆதாரத்துக்கும் பாஜக துணை நிற்கும் என்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். காவிரி விவகாரம் தொடர்பான தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது.

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: கர்நாடகத்தில் கடந்த முறை பாஜக ஆட்சியில் இருந்தபோது, இந்த மாதிரியான சூழல் எதுவும் ஏற்படாத காரணத்தையும் சிந்தித்து பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, இங்குள்ள ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருந்தாலும்கூட, காங்கிரஸ் கட்சியை பற்றியோ, கர்நாடக மாநில அரசை பற்றியோ விமர்சனம் இல்லாமல், மத்திய அரசை வலியுறுத்தி என்ற தோற்றத்தை இந்த தீர்மானம் கொண்டு வருவதாக நாங்கள் நினைக்கிறோம்.

பேரவை தலைவர் மு.அப்பாவு: இந்த தீர்மானம் அரசியல் ரீதியாக கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசுதான் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக வலியுறுத்துகிறோம்.

வானதி சீனிவாசன்: விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. விவசாயிகளுக்காக முழுமையான நீர் ஆதார உரிமைகளுக்காக தமிழக பாஜக எந்த நிலையிலும் துணை நிற்கும். அரசியல் பிரச்சினைபோல், அரசாங்க பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு வேண்டும். அந்த வகையில், இந்த தீர்மானத்தில் நதிகளை தேசியமயமாக்க வேண்டும், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு போன்றவற்றை சேர்க்க வேண்டும்.

அப்பாவு: நீங்கள் சொல்வது மற்றொரு பிரச்சினை. இந்த தீர்மானத்தில் உங்கள் கட்சியின் நிலைப்பாட்டை மட்டும் சொல்லுங்கள்.

வானதி சீனிவாசன்: ஒரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இந்த தீர்மானம் என்பது ஒரு முழுமையான தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லை. எங்கள் கோரிக்கையான நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.

அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு போன்றவற்றை தீர்மானத்தில் சேர்த்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்தால் நாங்கள் இந்த தீர்மானத்தை ஆதரிப்போம்.

இதையடுத்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசும், கர்நாடகவை ஆளுகின்ற காங்கிரஸ் அரசும் ‘இண்டியா’ கூட்டணியில் இருக்கின்ற கட்சிகள். கூட்டணி கட்சியான அம்மாநில காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, கூட்டணி பலத்தை வைத்து காவிரி நீரை முதல்வரால் தமிழகத்துக்கு பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மாநிலம் எதுவாக இருந்தாலும், சட்டத்தின்படி அம்மாநிலத்துக்கான தண்ணீரை பெற வேண்டும் என்பதற்காக, அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மாநில சுயாட்சி முக்கியம் என்றும், மாநிலத்தின் அதிகார வரம்பில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும் திமுக எதிர்த்தது. ஆனால், இப்போது, கர்நாடக அரசிடம் இருந்து மத்திய அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு பெற்று தர வேண்டும் என்று சொல்வதுதிமுக அரசின் இரட்டை நிலைப்பாட்டை குறிக்கிறது. மக்களை ஏமாற்றும் நாடகமாகதான் இந்த தீர்மானத்தை பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE