தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், காவிரி விவகாரம் தொடர்பான அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்த 69.7 டிஎம்சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு, ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை குறுவை பாசனத்துக்காக திறந்து வைத்தோம். திறந்துவிடப்பட்ட நீரும் கடைமடைப் பகுதி வரை சென்றது.

செயற்கையான நெருக்கடி: நமது வேளாண் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவைப் பயிரை இந்த ஆண்டும் சிறப்பாக பயிரிடுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடக மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை.

இந்த பாசன ஆண்டு பற்றாக்குறை ஆண்டாக இருந்துவரும் நிலையில் கடந்த 5-ம் தேதி வரை 90.25 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டாவில் 6 லட்சம்ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா சாகுபடிக்காக, முறைபாசனப்படி நீர் பங்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள நாட்களுக்கு நமக்கு உரிய நீரை பெற்று, குறுவை பயிரையும், அடுத்து நடவுசெய்யப்பட உள்ள சம்பா பயிரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்கு உள்ளது.

உணவுத் தேவை.. உயிர்த் தேவை: தமிழக மக்களின் உணவுத் தேவைக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் உயிர்த் தேவைக்கும் அவசியமானது காவிரி நீர். அதை தமிழக மக்களுக்கு பெற்றுத் தருவதில் எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு பெற்றுத்தருவோம். மத்திய அரசு இதில் முறையாக செயல்பட்டு தமிழகமக்களுக்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இறுதிதீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறக்குமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை இந்த பேரவை அரசினர் தனித் தீர்மானம் மூலம் ஒருமனதாக வலியுறுத்துகிறது. நான் முன்மொழிந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்று, நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

தொடர்ந்து, இத்தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசியதாவது: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகாவில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், காவிரி விவகாரத்தில் ஒன்றுசேர்ந்து விடுகின்றனர். அந்த ஒற்றுமைதான் அங்கு பலம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: இந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்தாலும், முழு மனதோடுஇந்த அரசு செயல்பட்டால்தான் நீரை பெற முடியும். கர்நாடகாவில் எந்த ஆட்சி வந்தாலும் தண்ணீர் கிடைப்பது சிரமம். அதனால், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி கர்நாடகாவில் இருந்து தண்ணீரை பெறுவதற்கு அதிமுக எப்போதும் துணை நிற்கும்.

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: இந்த தீர்மானம் முழுமையான தீர்வை நோக்கியதாக இல்லை. எங்கள் கோரிக்கையான நதிகளை தேசியமயமாக்குதல், அணை பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவு போன்றவற்றை தீர்மானத்தில் சேர்த்துக் கொள்வதாக உறுதிதந்தால் ஆதரிப்போம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

வானதி சீனிவாசன் பேசியதை தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்) கே.மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), டி.சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) ஆகியோர் ஆதரித்து பேசினர். இதையடுத்து, குரல்வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE