கிராம சபை கூட்டத்தில் விவசாயியை உதைத்த வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் விவசாயியை உதைத்த ஊராட்சி செயலர் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான ராஜு என்பவரின் ஜாமீன் மனுவை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காகுளம் கிராமத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் கேள்வி கேட்ட விவசாயி அம்மையப்பன் என்பவரை எம்.எல். ஏ மான்ராஜ், பிடிஓ மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூ முன்னிலையில் ஊராட்சி செயல் அலுவலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்தார். இதுகுறித்த புகாரில் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த வன்னியம்பட்டி போலீஸார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். விவசாயி அம்மையப்பனை தாக்கிய தங்கபாண்டியன் ஆதரவாளரான ராசு என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்து முன்ஜாமீன் பெற்றார்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ராசு தாக்கல் செய்த மனுவை ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் மீதான கொலை மிரட்டல் வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விவசாயி அம்மையப்பன் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE