சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்வந்து மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் துணை காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்தார். 1996 மே 13 முதல் 2002 மார்ச் 31 வரையிலான நாட்களை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை காலமாக எடுத்துக்கொண்டு, 2002 மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்தது.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ம் தேதி நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், ‘பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை’ எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், குற்ற விசாரணை சட்டம் 391-வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார். மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை, பொன்முடி உள்ளிட்டோர் இந்த வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதேநேரம், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிபுத் துறை மற்றும் பொன்முடி தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையில், 3 மாதங்களுக்கு ஒருமுறை சுழற்சி நடைமுறைப்படி, இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (அக்.9) விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago