“வாடும் சம்பா இளம் நெற்பயிரை காக்க தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்” - டெல்டா விவசாயிகள் வேதனை

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடியில் சம்பா பருவத்தில் நேரடி விதைப்பின் மூலம் முளைவிட்டுள்ள இளம் நெற்பயிர்களை காப்பாற்ற, விவசாயிகள் கல்லணைக் கால்வாய் ஆற்றில் இருந்து டீசல் மோட்டார்கள் மூலம் வயலுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 16-ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது.

இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். 5.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நிலையில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிர்கள் முற்றிய நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குறுவை சாகுபடியை தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்வது வழக்கம். இதற்காக டெல்டா மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை வேளாண்மைத் துறையினர் விவசாயிகளுக்கு வழங்கி வந்தனர்.

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தொடங்கியிருக்க வேண்டிய சம்பா நடவு பணியை, போதிய மழையின்மை மற்றும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு சரிவால் விவசாயிகள் காலதாமதப்படுத்தி வந்தனர். எனினும், மோட்டார் பம்புசெட், ஆழ்துளை கிணறு பாசனம் மேற்கொள்ளும் விவசாயிகளும், ஆற்றுப் பாசனம் செய்யும் விவசாயிகளும் செப்டம்பர் மாதம் இறுதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கரிலும், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 80 ஆயிரம் ஏக்கரிலும் சம்பா சாகுபடியை தொடங்கி உள்ளனர்.

சம்பா சாகுபடியில் பம்புசெட் பாசனம் உள்ள விவசாயிகள் நடவு முறையையும், ஆற்றுப்பாசனம் மூலம் சாகுபடி செய்பவர்கள் நேரடி நெல் விதைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வருவது சரிந்ததால், கல்லணையில் இருந்து காவிரி, கல்லணைக் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீர் வரத்து குறைந்ததால், நெற்பயிருக்கு தேவையான தண்ணீரை பாய்ச்ச முடியவில்லை.

இதனால் சம்பா இளம் நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதை பார்த்த விவசாயிகள், இப்போது பயிரை எப்படியாவது காப்பாற்றி விட்டால், விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை நெற்பயிர் விளைய பின்னர் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆறுகள், குளங்கள், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் கூடுதல் செலவு செய்து வயலுக்கு இறைத்து வாடும் நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, தஞ்சாவூர் அருகே பொட்டுவாச்சாவடியில் நேரடி நெல் விதைப்பு மூலம் தெளிக்கப்பட்ட சம்பா நெற்பயிர் 70 ஏக்கரில் முளைவிட்டு, தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதை பார்த்த அப்பகுதி விவசாயிகள், கல்லணைக் கால்வாய் ஆற்றில் தேங்கியுள்ள தண்ணீரை டீசல் மோட்டார் மூலம் இரவு பகலாக இறைத்து வயலுக்கு பாய்ச்சி நெற்பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வாடும் சம்பா இளம் நெற்பயிரை வளர்த்தெடுக்கமோட்டார் மூலம் தண்ணீர் விவசாயிகள் கண்ணீர் பம்புசெட் இல்லைபொட்டுவாச்சாவடி விவசாயி கே.மாதவன் கூறுகையில், கல்லணைக் கால்வாய் ஆற்றின் கரையோரம் நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம். எங்களுக்கு பம்புசெட் கிடையாது. ஆற்றுப்பாசனத்தை நம்பி தான் விவசாயம் செய்கிறோம். குறுவையில் நாங்கள் நடவு செய்யவில்லை, சம்பா தான் இந்த பகுதிக்கு ஏற்ற பருவம் என்பதால் நாங்கள் நேரடியாக நெல் விதைத்துள்ளோம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரையிலான நெற்பயிர்கள் முளைவிட்டுள்ளன.

ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் தற்போது வாடி, காய்ந்து கருகி வருகின்றன. இதனால் கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நெற்பயிரை காப்பாற்றி வருகிறோம். இதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆனாலும், வாடும் பயிரை பார்க்க மனமில்லாமல் செலவு செய்து காப்பாற்றி வருகிறோம் என்றார்.

தண்ணீரை விலைக்கு வாங்குகிறோம்: திருவாரூர் மாவட்டத்தில் ஒருபோகம் மட்டுமே சாகுபடி செய்யக்கூடிய திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியத்தின் சில பகுதிகளில் வழக்கம்போல சிஆர்.1009 என்ற நெல் ரகத்தை தெளிக்காமல், 100 முதல் 120 நாட்கள் வயதுடைய கோ42, 45, 39 ஆகிய ரகங்களை தெளித்துவிட்டு, தண்ணீருக்காக காத்திருக்கின்றனர். இடையிடையே வந்த வெப்பச்சலன மழையால் முளைவிட்ட சம்பா நெற்பயிர்கள், கடந்த 15 நாட்களாக தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஆலத்தம்பாடியில் தண்ணீரின்றி காய்ந்து வரும் சம்பா பயிர்கள்.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பகுதி விவசாயி மாசிலாமணி கூறியதாவது: இப்பகுதியில் வாய்ப்புள்ள விவசாயிகள் மட்டும் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் மோட்டார் பம்புசெட்களில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி, பாசனம் செய்து வருகின்றனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகள் கடலோரப் பகுதிகள் என்பதால், அருகருகே உள்ள மோட்டார் பம்புசெட்களை ஒரே நேரத்தில் இயக்க முடியாது. ஏதாவது ஒரு ஆழ்குழாய் கிணறில் மட்டுமே தண்ணீர் வரும் சூழல் உள்ளதால், மோட்டார் பம்புசெட் விவசாயிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என தெரிவித்தார்.

பம்புசெட் இல்லை: பொட்டுவாச்சாவடி விவசாயி கே.மாதவன் கூறுகையில், கல்லணைக் கால்வாய் ஆற்றின் கரையோரம் நாங்கள் சாகுபடி செய்து வருகிறோம். எங்களுக்கு பம்புசெட் கிடையாது. ஆற்றுப்பாசனத்தை நம்பி தான் விவசாயம் செய்கிறோம். குறுவையில் நாங்கள் நடவு செய்யவில்லை, சம்பா தான் இந்த பகுதிக்கு ஏற்ற பருவம் என்பதால் நாங்கள் நேரடியாக நெல் விதைத்துள்ளோம். ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரையிலான நெற்பயிர்கள் முளைவிட்டுள்ளன.

பொட்டுவாச்சாவடியில் போதிய தண்ணீர் இல்லாமல்
காய்ந்து வரும் சம்பா இளம்நெற்பயிர்.படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் தற்போது வாடி, காய்ந்து கருகி வருகின்றன. இதனால் கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை இறைத்து நெற்பயிரை காப்பாற்றி வருகிறோம். இதற்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஆனாலும், வாடும் பயிரை பார்க்க மனமில்லாமல் செலவு செய்து காப்பாற்றி வருகிறோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE