முட்புதர்கள், கழிவுகளால் வரட்டாறு அணை கால்வாயில் நீரோட்டம் தடைபடும் அபாயம்

By எஸ்.செந்தில்

அரூர்: அரூர் அருகே வரட்டாறு அணை கால்வாய் உரிய பராமரிப்பின்றி முட்புதர்கள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் அடைபட்டு உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கால்வாயை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணை உள்ளது. இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் வள்ளிமதுரை, தாதரவலசை, சாமநத்தம், கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, நாச்சினாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, புதூர் ஆகிய 15 கிராமங்களைச் சேர்ந்த 5,108 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன் 25 ஏரிகளும் நிரம்புகின்றன.

இந்நிலையில், வரட்டாறு அணையின் பிரதான மற்றும் வலது, இடதுபுறக் கால்வாய்களில் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. கால்வாய்களில் சிலர் கழிவுகளை கொட்டி அடைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், கால்வாயில் தண்ணீர் செல்லும் போது தடைபடும் நிலையுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கால்வாய் ஆக்கிரமிப்புகளால் விவசாய நிலங்களில் தண்ணீர் வெளியேறி சேதம் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க கால்வாய்களை தூர் வார வேண்டும் என பொதுப் பணித்துறையினரிடம் விவசாயிகள் பல முறை வலியுறுத்தினர். இருந்த போதிலும் அதற்கான நிதிஒதுக்கீடு இல்லை என துறை சார்பில் கைவிரிக்கப்பட்டது.

இதனால் மாற்று ஏற்பாடாக தற்போது கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களைக் கொண்டு கால்வாய்களில் அடைபட்டுள்ள மண் மேடுகள், கற்கள், முட்புதர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கீரைப்பட்டியைச் சேர்ந்த விவசாயி குமரேசன் கூறியதாவது: வரட்டாறு அணை கட்டப்பட்டபோது அமைக்கப்பட்ட கால்வாய்கள் அதன் பிறகு சரியாக பராமரிக்காமல் உள்ளது. பல இடங்களில் கால்வாயில் விரிசல் ஏற்பட்டு நீர் கசியும் வகையில் உள்ளது. இது தவிர பல இடங்களில் விவசாயக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால் நீர் செல்லமுடியாத அளவு அடைபட்டுள்ளது.

எனவே, பருவ மழை தொடங்குவதற்கு முன்னதாக இவற்றை சீரமைக்க வேண்டும். உரிய நிதி இல்லை என பொதுப்பணித்துறை கூறுவதால், அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக 100 நாள் வேலைத் திட்டப்பணியாளர்களை கொண்டு கால்வாய்கள் செல்லும் கிராம ஊராட்சிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE