நேரடி ஆவின் பாலகங்கள்: கோவையில் போலி பெயரில் இயங்கும் கடைகளுக்கு கல்தா

By டி.ஜி.ரகுபதி 


கோவை: விதிகளை மீறி செயல்படும் போலி ஆவின் பாலகங்களுக்கு பதிலாக ஆவின் நிறுவனமே நேரடியாக பாலகங்கள் அமைத்து வருகிறது. கோவை மாவட்டம் பேரூர் பச்சாபாளையத்தில் ‘ஆவின்’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்படும் பால், இங்கு தரம் வாரியாகபிரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்கள் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்களிடமிருந்து தினமும் சராசரியாக 1.50 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஆவினுக்கு 1,300-க்கும் மேற்பட்ட பால் பூத்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் சராசரியாக 2 லட்சம் லிட்டர் வரை பால் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. ஏறத்தாழ 1.50 லட்சம் வாடிக்கையாளர்கள் ஆவின் பாலை தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர்.

இதுதவிர, ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களுக்கும் மக்களிடம் வரவேற்பு உள்ளது. தரம் மற்றும் விலை குறைவே இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில், தனியார் வியாபாரிகள் மூலம் கோவையின் பல்வேறு இடங்களில் ஆவின்பெயரில் பாலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை விதிமீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘ஆவின் சார்ந்த பொருட்கள் மட்டும் விற்பனை செய்வதாக ஆவின் நிர்வாகத்திடம் கூறி அனுமதி பெற்று கடைகளை அமைக்கின்றனர். ஆனால், இங்கு டீ கடைகள், பேக்கரிகள் போல டீ, காபி, வடை, போண்டா, குளிர் பானங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

ஆவின் என்ற பெயர் உள்ளதால், அதன் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் இங்கு பொருட்களை வாங்குகின்றனர். ஆனால், ஆவினுக்கும், இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது மக்களுக்கு தெரியாது. கோவையில் விதிகளை மீறி, ஆவின் பெயரில் இயங்கும் தனியாருக்கு சொந்தமான பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து, ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஆவின் பெயரில் பாலகம் அமைக்க வழங்கப்பட்ட உரிமம் அனைத்தும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது ஆவின்பெயரில் பாலகம் அமைக்க தனியாருக்கு உரிமம் வழங்கவில்லை. ஆவின் பெயரை பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டு விட்டது.

ஆவின் பெயரை பயன்படுத்தி கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது தவறு. மாநகரில் 133 கடைகளில் ஆவின் பெயரில் பாலகம் அமைத்து டீ, காபி, தின்பண்ட வகைகள் விற்பனை செய்கின்றனர். ஆவின் பெயரை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

ஆவின் நிர்வாகத்தின் சார்பில் நேரடியாக ‘அவுட்லெட்’எனப்படும் ஆவின் பாலகங்கள் அமைத்து பொதுமக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.முதல் கட்டமாக 10 இடங்களில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, கவுண்டம்பாளையத்தில் இரண்டு இடங்களிலும், ராமநாதபுரத்தில் ஓரிடத்திலும் நேரடி ஆவின்பாலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒண்டிப்புதூர், சாயிபாபாகாலனி, கவுண்டர் மில், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சோமனூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களிலும் விரைவில் அமைக்கப்படும்.

மாநகரில் காவல்துறையுடன் இணைந்து காந்திபுரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஆவின் பாலகம்அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தனியார் மூலமும்ஆவின் சார்ந்த பொருட்களை ‘டீலர்ஷிப்’ முறையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அசல்ஆவின் பாலகங்களில் பால், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, கேக், இனிப்புகள், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும். கூடுதலாக டீ, காபி, தண்ணீர் பாட்டில்களும் விற்கப்படும்.

வேறு எதுவும் விற்கப்படாது. இவ்வாறு மாதந்தோறும் 5 பாலகங்கள் ஆவின் சார்பில் நேரடியாக தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆவின் பெயரை பயன்படுத்தி விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றவும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் வலியுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘அனுமதியில்லாமல், ஆவின் பெயரை பயன்படுத்தி இயங்கும்கடைகளை அப்புறப்படுத்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தொடர்ச்சியாக அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE