சென்னை - திருநெல்வேலி ‘வந்தே பாரத்’ ரயிலில் ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா? - எதிர்பார்ப்பில் சாமானிய ரயில் பயணிகள்

By மு.வேல்சங்கர்

சென்னை: சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலில் சாமானிய மக்களும்பயணிக்கும் வகையில், ‘எகனாமிக்’வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது நவீன வசதிகளுடன் அதிவிரைவு ரயிலாக ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது, 34 ‘வந்தே பாரத்’ ரயில்கள்இயக்கப்படுகின்றன. இவற்றில், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, விஜயவாடா - சென்னை சென்ட்ரல் இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

வழக்கமான விரைவு ரயில்களில் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்ல 11 மணி நேரம் ஆகும். ஆனால், ‘வந்தே பாரத்’ரயிலில் 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றுவிடலாம். இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டியும், 7 ஏசி சேர் கார் பெட்டிகளும் என 8 பெட்டிகளில் மொத்தம்590 பேர் பயணிக்க முடியும்.

பயணிகளுக்கான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் எல்லா தரப்பு மக்களும் பயணிக்க முடியாத நிலையில் அதன் கட்டணம் உள்ளது. வந்தேபாரத் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிக்கு ரூ.3,055, சேர் கார் பெட்டிக்கு ரூ.1,665 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நெல்லை, கன்னியாகுமரி ஆகிய விரைவு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிக்கு ரூ.395, மூன்று அடுக்குஏசி பெட்டிக்கு ரூ.1,040, 2 அடுக்குஏசி பெட்டிக்கு ரூ.1,460, முதல்வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2,440 எனகட்டணம் உள்ளது. இந்த விரைவுரயில்களின் தூங்கும் வசதி பெட்டிகளுக்கான கட்டணத்தைவிட ‘வந்தே பாரத்’ ரயிலின் சேர் கார் கட்டணம் பல மடங்கு அதிகமாகும். இதனால், சாமானிய, நடுத்தர மக்கள் பயணிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த பயணி சிவா கூறும்போது, "சென்னை - விழுப்புரத்துக்கு ‘வந்தே பாரத்’ ரயிலில் ஏசி சேர் காருக்கு ரூ.600 கட்டணம். ஆனால், வைகை அதிவிரைவு ரயிலில் சென்னை - விழுப்புரத்துக்கு ஏசி சேர் கார் வகுப்பு கட்டணம் ரூ.345 தான். எனவே, கட்டணத்தை சற்று குறைத்தால், நன்றாக இருக்கும் அல்லது எக்னாமிக் வகுப்பு பெட்டிகள் சேர்க்க வேண்டும்" என்றார்.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்த பயணி சையது கூறும்போது, "வந்தே பாரத் ரயில்கட்டணம் அதிகம்தான். வியாபாரிகள், மருத்துவப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் ஆகியோருக்கு இந்த ரயில் பேருதவியாக உள்ளது.ஏசி சேர் கட்டணத்தை ரூ.1,660-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க வேண்டும். தற்போது 8 பெட்டிகள் தான் உள்ளன. இதை 12 அல்லது 16பெட்டிகளாக உயர்த்த வேண்டும்" என்றார்.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க முன்னாள் துணைத்தலைவர் மனோகரன் கூறியதாவது:

‘வந்தே பாரத்’ ரயில்களில் சாமானியர்களின் பயணம் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த கட்டணத்தில் பயணிக்க, ‘எகனாமிக்’ வகுப்பு பெட்டிகள் வடிவமைத்து, ‘வந்தே பாரத்’ ரயில்களில் இணைக்க முன்வர வேண்டும். அப்படி இல்லை என்றால்,ஒரு தரப்பு மக்களின் ஆதரவையும்மற்றொரு தரப்பு சாமானிய மக்களின் எரிச்சலையும் ‘வந்தே பாரத்’ ரயில் விரைவில் சம்பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

‘வந்தே பாரத்’ ரயிலை உருவாக்க அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல, அதிகதொழில்நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. எனவே, ‘வந்தே பாரத்’ ரயிலைமற்ற ரயில்களுடன் ஒப்பிட முடியாது. ஒவ்வொரு ரயிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு இயக்குவதில் ரயில்வேக்கு ரூ.768.51 வருவாய் கிடைக்கும். ‘வந்தே பாரத்’ ரயிலை ஒரு கிலோ மீட்டர் இயக்குவதற்கு ரூ.1,806.45 செலவிடப்படுகிறது. இதன்மூலமாக, ரயில்வேக்கு நிகரவருவாய்க்குப் பதிலாக, ரூ.1,037.94 நிகர இழப்பு ஏற்படுகிறது.

ஆனால், ஒரு ரயில் இயக்க செலவில், ரயில் பயணிகளிடம் 100 சதவீதகட்டணத்தில் 42.5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மீதம் அரசு சலுகையாக அளிக்கப்படுகிறது. இந்த இழப்பை சரக்கு ரயில் மற்றும் ரயில்களின் ஏசி சேர் கார், எக்ஸிகியூட்டிவ் சேர் கார் கட்டணம் மூலமாக ஈடு கட்டப்படுகிறது.

இதுபோன்ற காரணங்களால், ‘வந்தே பாரத்’ ரயிலில் எகனாமிக் வகுப்பு பெட்டிகள் பொருத்த வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், இதே வகையில், ‘புஸ்புல்’ ரயில் தயாரிக்கப்படுகிறது. இது சாதாரண ‘வந்தே பாரத்’ ரயில் போல இருக்கும். இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE