காவிரி அணைகளை கையாள ஆணையத்துக்கு அதிகாரம் வழங்குவதே முக்கியம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவிரி சிக்கலின் அடிப்படையை அறியாமல், இதுபோல பெயரளவில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; விவசாயிகள் கண்ணீரையும் துடைக்க முடியாது.

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகுவதற்கு காரணமே காவிரி ஆணையமும், அதன் அதிகாரமற்ற தன்மையும்தான். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் சுமார் 100 டிஎம்சி தண்ணீர் இருந்தது. அப்போது தமிழக அரசு கோரியவாறு விநாடிக்கு 24,000 கனஅடி தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டிருந்தால், காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்காது.

தண்ணீர் இல்லாமல் மேட்டூர் அணை மூடப்பட உள்ள இன்றைய நிலையில்கூட, கர்நாடக அணைகளில் 67 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அதில் இருந்து குறைந்தது 20 டிஎம்சி நீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டால், இப்போதும்கூட குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும். ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையம் தயாராக இல்லை. ஒருவேளை காவிரி ஆணையம் உத்தரவிட்டாலும், அதை கர்நாடக அரசு செயல்படுத்தாது. இந்த சூழலை மாற்றாத வரை, காவிரி பாசன மாவட்டங்களில் கண்ணீர் சூழல் மாறாது.

அதேநேரம், இந்த சூழல் மாற்ற முடியாதது அல்ல. தமிழகம், கர்நாடகா, கேரளாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை கையாளும் அதிகாரத்தை காவிரி ஆணையத்துக்கு வழங்குவது மட்டுமே இதற்கான தீர்வு. ஆணையத்துக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழகத்துக்கான தண்ணீரை ஆணையமே திறக்க முடியும். கர்நாடகா நினைத்தாலும், அதை தடுக்க முடியாது.

அதிகாரம் இல்லாத காவிரி ஆணையத்தால் பயன் இல்லை என்பது இப்போது தெளிவாகிவிட்ட நிலையில், அதை மாற்றி அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி ஆணையத்தை அமைப்பதுதான் சரியான தீர்வாகும். அதற்கான முயற்சிகளை தமிழகம் தொடங்க வேண்டும். அதன் தொடக்கமாக, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டவாறு அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து, அதற்கான அரசியல் மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE