காரியமங்கலத்தில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து வெளியேறும் எரிவாயு? - ஓஎன்ஜிசி விளக்கம்

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே காரியமங்கலத்தில் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றில் இருந்து எரிவாயு வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி சார்பில் 100-க்கும் மேற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகளை கடந்த 50 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், மீத்தேன் திட்டம் தொடர்பான அச்சம் ஏற்பட்டதிலிருந்து பொதுமக்கள் திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஏற்கெனவே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டு உற்பத்தி நின்று போன எண்ணெய் கிணறுகள் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பல மாதங்களாக, மூடி வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, திருவாரூர் அருகேஉள்ள காரியமங்கலம் கிராமத்தில் உற்பத்தி நின்று போன 2 கச்சா எண்ணெய் கிணறுகளை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டன.

இதில், கடந்த சில நாட்களாக மூடப்பட்ட கச்சா எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறி வருகிறது. கச்சா எண்ணெய் கிணற்றில் தேங்கியுள்ள மழைநீரில் எரிவாயு வெளியேறுவதால் நீர்க்குமிழி தோன்றி மறைந்து வருகிறது. இதனால், கிராம மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்நிறுவனத்தினர் யாரும் இதுவரை அதை சரி செய்யும் பணிகளை தொடங்கவில்லை என்றும், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், காரியமங்கலத்தில் எரிவாயு கசிவதாக கூறப்பட்ட கச்சா எண்ணெய் கிணற்றில், நேற்று காரைக்கால் ஓஎன்ஜிசி அலுவலகத்தில் இருந்து வந்த பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக ஓஎன்ஜிசி காரைக்கால் அலுவலக அதிகாரிகள் கூறியது: எண்ணெய் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேறுவது குறித்து தகவல் கிடைத்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். எண்ணெய் கிணறுகளில் எரிவாயு வெளியேறுவதால், பாதிப்பு ஏதும் இல்லை.

குறிப்பாக மூடப்பட்ட கிணற்றிலிருந்து வெளியேறும் வாயு, இயற்கை எரிவாயு இல்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எரிவாயு வெளியேறுவதாக கூறப்படும் எண்ணெய் கிணற்றின் மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மீது இரும்பு பைப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளது.

இந்த இரும்பு பைப்புகளில் தேங்கியுள்ள எரிவாயு ஏதேனும் கசிகிறதா என்பது குறித்து 2-வது முறையாக முழுமையான ஆய்வை செய்யவுள்ளோம். ஓஎன்ஜிசியின் நேரடி மேற்பார்வையில் 2 கிணறுகளும் உள்ளன. எனவே, இது குறித்து பொதுமக்கள் எந்த வகையிலும் அச்சப்பட வேண்டியதில்லை என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE