மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளில் இருந்து அழுகிய நிலையில் கை, கால், உடல்கள் என தனித்தனியாக கண்டெடுக்கப்படுகிறது. வியாழக்கிழமை இரவு வரை 61 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த 28-ம் தேதி இடிந்து தரைமட்டமான 11 மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
புதன்கிழமை இரவு 10 மணி வரை 49 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர். இதையடுத்து அன்று நள்ளிரவில் மேலும் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு
இந்நிலையில், 5-வது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடந்தன. பிற்பகல் 2 மணி வரை 10 வயது சிறுவன், பெண்கள் உள்பட மொத்தம் 7 பேரின் உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். மாலை 5.50 மணியளவில் இடிபாடுகளில் இருந்து ஒருவரின் கால் மட்டும் மீட்கப்பட்டது. அந்த காலுக்குரிய உடல் உள்ளே சிக்கியிருக்கலாம் என்பதால் அதையும் ஒரு சடலமாக கணக்கில் எடுத்துக் கொள்ளும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கட்டிட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
தனித்தனியாக உடல்
கட்டிடம் இடிந்து 5 நாட்களாகி விட்டதால் இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் அழுகிவிட்டன. இதனால் தலை, கை, கால்கள் தனித்தனியாக பிய்ந்து கிடந்தன. கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது. 6 பொக்லைன் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட ஒடிசாவை சேர்ந்த விகாஷ்குமார் (26), மீட்புக் குழுவினரிடம் கூறும்போது, ‘‘கீழ் தளத்தில் டிவி இருந்தது. அங்கு பெண்கள், குழந்தைகள் என 20-க்கும் மேற்பட்டவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் கட்டிடம் இடிந்து விழுந்தது’’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து, தற்போது அந்தப் பகுதியில் மீட்புப் பணி நடந்து வருகிறது.
பணிகள் இன்று முடியும்
மீட்புப் பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழு டிஐஜி செல்வன் கூறுகையில், ‘‘இடிந்து விழுந்த கட்டிடத்தின் முன்பகுதி கீழ்தளம் வரை இடிபாடுகளை அகற்றும் பணிகள் முடிந்துவிட்டன. கட்டிடத்தின் பின்பகுதியில் தரைதளம் மற்றும் கீழ்தளத்தை தோண்டும் பணி நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலைக்குள் பணிகள் அனைத்தும் முடிந்துவிடும்’’ என்றார்.
100 பேர் சிக்கியிருக்கலாம் ஆந்திர அமைச்சர் தகவல்
கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியை ஆந்திர மாநில அமைச்சர் கிமிடி மிருணாளினி வியாழக் கிழமை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: இடிந்த கட்டிடத்தில் ஆந்திராவைச் சேர்ந்த 51 தொழிலாளர் வேலை பார்த்ததாக சொல்லப்படுகிறது. அவர்களில் 31 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 26 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து 18 உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள 8 உடல்களும் விரைவில் கொண்டு செல்லப்படும். கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் உடல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 100 பேர் சிக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
400 லோடு இடிபாடுகள்
இடிந்து விழுந்த கட்டிடத்தின் மொத்த எடை 70 ஆயிரம் டன் இருக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிபாடுகள் உடனுக்குடன் லாரிகளில் அள்ளப்படுகிறது. இதுவரை 400 லோடு இடிபாடுகள் அள்ளப்பட்டுள்ளன. அவை பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
தாய்லாந்து அதிகாரிகள் ஆய்வு
டெல்லியில் உள்ள ஆசிய பேரிடர் மேலாண்மை மையத்தில் பணியாற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இமானுவேல், தாரிக், ஜிந்தால் ஆகியோர் வியாழக்கிழமை மவுலிவாக்கம் வந்து, கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்டிட விபத்து பற்றி மீட்புக் குழுவினரிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்த னர்.
கடந்த 2 நாட்களாக இடிபாடுகளில் இருந்து ஒருவர்கூட உயிருடன் மீட்கப்படவில்லை. உடல்கள்தான் வெளியே எடுக்கப்படுகின்றன. அதுவும் அழுகிய நிலையிலும் கை, கால்கள் தனித்தனியாகவுமே கிடைக்கின்றன. தொடர்ச்சியாக வரிசையில் நிற்கும் மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்படும் உடல்களை பிளாஸ்டிக் பையில் சுற்றி, அப்புறப்படுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
42 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago