இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி அளித்துள்ளார்.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று (சனிழ்க்கிழமை) காலை இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இதுவரை இரு தரப்பிலும் சேர்த்து 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களின் தாக்குதலை நியாயப்படுத்தி உள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ், பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்துக்கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சூழ்ந்துள்ள போர் மேகத்தால் பல நாடுகளும் தத்தம் மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. மத்திய அரசும் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அவசர தேவைக்கு 97235 256748 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அல்லது cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம் என்றும் அறிவித்திருக்கிறது.

அமைச்சர் உறுதி: இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என இதுவரை அயலகத் தமிழர் நல வாரியத்தில் 18 பேர் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்களும் உள்ளதாகவும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், 18 பேரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் இருக்கும் தமிழர்கள் nrtchennai@tn.gov.in, என்ற nrtchenna.in@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும், +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 போன்ற தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலும் இருந்தும் உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்தும் தமிழர்கள் மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE