நாகப்பட்டினம்/சென்னை: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 4 பேரைத் தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர்கள், ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மணியன்(50), வேல்முருகன்(27), சத்யராஜ்(32), அக்கரைப்பேட்டை கோடிலிங்கம்(53) ஆகியோர் நேற்று முன்தினம் வெள்ளப்பள்ளம் கிராமத்தில் இருந்து ஃபைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேக இன்ஜின் பொருத்தப்பட்ட படகில் அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் 3 பேர், வெள்ளப்பள்ளம் மீனவர்களின் படகைச் சுற்றிவளைத்தனர்.
பின்னர் அவர்களில் இருவர் வெள்ளப்பள்ளம் மீனவர்களின் படகில் ஏறி, மீனவர்களை ரப்பர்தடியால் சரமாரியாகத் தாக்கியதுடன், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து, படகில் இருந்த 200 கிலோ எடை கொண்ட புதிய வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, மீன்கள், 3 செல்போன்கள் உட்பட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், மீனவர் மணியன் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண் கயிற்றையும் பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு நேற்று அதிகாலை வெள்ளப்பள்ளம் கடற்கரைக்கு வந்துசேர்ந்தனர். நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மீனவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன், நாகை நகராட்சித் தலைவர் ரா.மாரிமுத்து ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று, மீனவர்களை சந்தித்து, ஆறுதல் கூறினர்.
ஏற்கெனவே, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற செருதூர் மீனவர்கள் 4 பேர் மீது செப்.23-ம் தேதியும், 5 பேர் மீது செப்.25-ம் தேதியும் கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி, பொருட்களைப் பறித்துச் சென்ற நிலையில், மீண்டும் தற்போது கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அச்சமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட, மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைவர்கள் கண்டனம்: கடல் கொள்ளையர்களின் அத்துமீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: கடல்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கி, அவர்களது பொருட்களைக் கொள்ளையடிப்பதற்காக இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட கூலிப் படையினர் என்று கூறப்படுகிறது. இந்த சதித் திட்டத்தை இந்திய அரசு முறியடிக்க வேண்டும். அத்துமீறல்களுக்கு முடிவுகட்ட வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இலங்கை கடற்படை, கடல் கொள்ளையர்களின் தாக்குதலை கண்டுகொள்வதில்லை. எனவே, மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், இலங்கை அரசுடன்பேசி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: இலங்கை கடல் கொள்ளையர்களால், தமிழகமீனவர்கள் கடலுக்குச் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்ய ஏதுவாக இந்திய கடற்படை ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago