மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் சரிவால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதல் நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தேங்கி வைக்கப்படும் நீரை கொண்டு, டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நீரை நம்பி குறுவை, சம்பா, தளாடி ஆகிய முப்போக விளைச்சலை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில் 100 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்ததாலும், பருவமழை எதிர் கொண்டு உரிய நாளான ஜூன் 12-ம் தேதி தமிழக முதல்வர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது, நீர்மட்டம் 103 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 867 கனஅடியாகவும் இருந்தது. விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 334 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 154 கன அடியாக சரிந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியில் இருந்து 2,300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 32.25 அடியாகவும், நீர் இருப்பு 8.45 டிஎம்சியாகவும் உள்ளது. மீன் வளம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, நீர் திறப்பை படிப்படியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது.

ஜூன் 12-ம் தேதியிலிருந்து இதுவரை சுமார் 91 டிஎம்சி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு இதுவரை 46 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. நடப்பாண்டு பருவமழை பெய்யாததாலும், கர்நாடக மாதந்தீர நீர் பங்கீட்டை வழங்கததால் விவசாயத்திற்கும் உரிய வழங்க முடியவில்லை. 22 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காவும், மீன் வளத்திற்காகவும் அணையில் 4 டிஎம்சி முதல் 9 டிஎம்சி வரை தண்ணீர் சேமிக்க வேண்டும். தொடர்ந்து, அணையில் இருந்து தண்ணீர் திறப்பதால் சேறும், சகதிகளாக வெளியேறும். மேலும், மீன்வளமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, அணையில் இருந்த பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதியிலிருந்து குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதாலும், போதியளவு நீர்வரத்து இல்லாததால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, அணையில் 7.50 டிஎம்சி தண்ணீர் தேங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணையில் இருந்த பாசனத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்துவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எனவே. நாளை மாலை முதல் தண்ணீர் நிறுத்தவும் வாய்ப்புள்ளது. மேலும், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஒரிரு நாட்கள் தண்ணீர் திறக்கப்படும்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE