காவிரி பிரச்சினை | அக்.11-ல் டெல்டா மாவட்டங்களில் பந்த்: மார்க்சிஸ்ட் ஆதரவு

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி பிரச்சினையில் அக்டோபர் 11-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இம்முறை டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. காவிரியிலிருந்து தமிழகத்துக்கு போதிய தண்ணீர் திறந்து விடாததால் குறுவை சாகுபடி செய்துள்ள கடைமடை பகுதிகளில் தண்ணீர் செல்லாமல் சாகுபடி செய்த பயிர்கள் கருகியுள்ளன. இதனால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் வேதனையில் மூழ்கியுள்ளனர்.

கறுகிய பயிரைக் கண்டு நாகப்பட்டினத்தில் ஒரு விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட தொடர்ந்து மறுத்து வருவதுடன் அரசியல் சாசன சட்டத்தையும் மீறி செயல்படுகிறது. இப்பிரச்சனையில் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகமாக தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

இந்நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படியும், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் டெல்டா மாவட்டங்களில் 11.10.2023 அன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழகத்தின் நலன் காக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்கிறது.

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடக மாநில அரசு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டுமெனவும், ஒன்றிய பாஜக அரசு தமிழக விரோதப் போக்கை கைவிட்டு விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவதற்கு போதிய நிர்ப்பந்தம் அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE