சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர கர்நாடக மேலவை குழுவினரிடம் தமிழிசை வலியுறுத்தல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “சகோதரத்துவ உணர்வோடு காவிரி நீரை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கர்நாடக மேலவை குழுவினரிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் எம்.கே.பிரானேஷ் தலைமையிலான சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் அதிகாரிகள் 4 பேர் அடங்கிய குழுவினர் அரசு முறை பயணமாக புதுச்சேரிக்கு வந்தனர். இந்தக் குழுவினர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

அப்போது, ‘இந்தியாவில் அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வருகிறோம். காவிரி நதிநீர்ப் பகிர்வு பிரச்சினையிலும் சகோதரத்துவ உணர்வோடு பொறுப்புடன் செயல்பட்டு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று ஆளுநர் தமிழிசை வலியுறுத்தினார். தமிழ் இலக்கியங்களில் காவிரி நதி கரைபுரண்டு ஓடும் அழகும் மீண்கள் துள்ளி விளையாடும் அழகும் சொல்லப்பட்டிருப்பதாகவும், காவிரி நதிநீர் பாசனத்தின் மூலம் யானை கட்டி போரடிக்கும் அளவுக்கு தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக சிறப்புடன் விளங்கியதையும் எடுத்துக் கூறினார்.

இதன் பின்னர் அந்த குழுவினர் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அப்போது சட்டப்பேரவையில் உள்ள நிலைக்குழுக்கள், அவற்றின் அதிகாரங்கள், அவை செயல்படும் விதங்கள் குறித்தும் புதுச்சேரியில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் முதல்வர் ரங்கசாமி காட்டும் முனைப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையையும் கர்நாடக குழுவினர் பாராட்டினர். தொடர்ந்து கர்நாடக மேலவை உறுப்பினர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையை சுற்றி பார்த்தனர். இந்தச் சந்திப்பின்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உடனிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE