வெற்றிலையில் மாவுப் பூச்சி தாக்குதல்... வாடி வதங்கும் விவசாயிகள்! - அரசு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டம் பண்டாரவாடை பகுதியில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெற்றிலை கொடியில் ஏற்பட்டுள்ள மாவுப் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவாடை, ராஜகிரி, வன்னியடி, இளங்கார்குடி, நெடுந்தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு பதியமிட்ட இந்த வெற்றிலைக் கொடியிலிருந்து, தற்போது விற்பனை செய்வதற்காக வெற்றிலைகளை பறிக்கும்பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக பகலில் கடும் வெயில், இரவில் காற்றுடன் மழை என காலநிலை மாற்றம் காரணமாக, வெற்றிலைக் கொடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெற்றிலைகள் நிறம்மாறியுள்ளதால், அறுவடை செய்யும் வெற்றிலையை விற்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தோட்டக்கலைத் துறையினர் இந்தப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வெற்றிலையை தாக்கியுள்ள மாவுப் பூச்சி தாக்குதலை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவுப்பூச்சி தாக்குதலுக்குள்ளான பண்டாரவாடை
பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெற்றிலைக் கொடி.

இதுதொடர்பாக பண்டாரவாடை வெற்றிலை விவசாயி முகம்மது இஸ்மாயில் கூறியது: இந்தப் பகுதியில் பல தலைமுறைகளாக வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம். இங்கு சாகுபடி செய்யப்படும் வெற்றிலைகளை சென்னை, விழுப்புரம், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகிறோம். காலநிலை மாற்றத்தால், தற்போது பறிக்கக்கூடிய வெற்றிலைகளில் மாவுப் பூச்சி தாக்கியுள்ளதால், அந்த வெற்றிலைகள் கருப்பு நிறத்தில் மாறிவிடுகின்றன.

இதனால், வாரந்தோறும் சுமார் 5,000 கவுளி வெற்றிலைகள் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது 1,000 கவுளி மட்டுமே விற்பனை செய்யக்கூடிய நிலை உள்ளது. மேலும், ரூ.60-க்கு விற்கப்பட்ட ஒரு கவுளி வெற்றிலையை ரூ.30-க்கு கூட விற்க முடிவதில்லை. இதனால், வெற்றிலையை பதியமிட்டு, பறிக்கும் வரை ஒரு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது.

எனவே, இந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட வெற்றிலை விவசாயிகளின் நிலையறிந்து, வெற்றிலைக் கொடிகளுடன் சேர்ந்து வாழ்வாதாரத்துக்காக வாடிக்கொண்டிருக்கும் வெற்றிலை விவசாயிகளுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும். அவர்களுக்கு இழப்பீடும், தொடர்ந்து சாகுபடி மேற்கொள்ள வங்கியில் வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும் என்றார்.

இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் பொ.அனுசுயா கூறும்போது, பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE