புதுச்சேரியில் கோயில் சொத்துகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எப்போது?

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில், கோயில் சொத்துகளை ஆன்லைனில் வெளியிடும் பணி மந்தமாக நடக்கிறது. இத்திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து ஓராண்டாகியுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க தனிக்குழுவை அரசு அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகிறது.

புதுச்சேரியைப் பற்றிய மனச்சித்திரங்கள் புதுச்சேரிக்கு வெளியில் இருப்போருக்கு வேறு வேறாக இருக்கலாம். ‘ஒரு சுற்றுலா பயண களிப்புக்கான இடம்’ என்று மட்டுமே புதுச்சேரியை கருதலாம். அதைத் தாண்டி அது ஒரு பரந்துபட்ட அதிகமான விவசாயம் செழித்த பூமி, தறி நெசவும், மீன்பிடித் தொழிலையும் தொடக்கம் முதலே செழிப்பாக கொண்டிருந்த பூமி.

இதையெல்லாம் தாண்டி, புதுச்சேரியை ‘வேதபுரி’ என்றும் ‘அறிவின் நகரம்’ என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. சித்தர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் இருப்பிடமான புதுச்சேரி, பல கோயில்கள் அமையப் பெற்ற ஒரு புண்ணிய பூமியாகும். பழமையும் புதுமையும் ஒருங்கே அமையப் பெற்றது புதுச்சேரியின் சிறப்பாகும். இத்தகைய கோயில்களின் சிறப்புடைய நகரத்தில் சமீப காலமாக கோயில்கள் சார் சொத்துகளால் சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

புதுச்சேரி யூனியன்பிரதேசத்தில் 243 கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இக்கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிட இந்து சமய அறநிலையத் துறை நிறுவப்பட்டுள்ளது. இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1972 மற்றும் விதிகள் 1975-ல் அளித்துள்ள அதிகாரத்தின்படி அறங்காவல் குழுக்கள், சிறப்பு அதிகாரிகள், நிர்வாக அதிகாரிகள் இத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களை நிர்வகித்து வருகின்றனர்.

இதற்கிடையே, புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் குறித்த முழு விவரங்களை பக்தர்கள் அறிய, ‘ஒருங்கிணைந்த கோயில்கள் மேலாண்மை அமைப்பு’ என்ற ‘ஆன்லைன் போர்ட்டல்’ உருவாக்கப்பட்டது. இதில் கோயில்கள் முகவரி, நடத்தப்படும் திருவிழா, பூஜை விவரம், அவை நடக்கும் நேரம், கோயில்கள் அமைப்பு, வரலாறு, சிறப்பு அம்சங்கள் உள்ளிட்டவை இடம் பெறும் என முடிவு செய்யப்பட்டது.

இதைத் தாண்டி, ஒவ்வொரு கோயிலின் அசையும் சொத்து, அசையா சொத்து விவரங்களை திரட்டி ஆன்லைனில் வெளியிட முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பணியை கடந்த 2022-ல் துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஒருங்கிணைந்த கோயில்கள் மேலாண்மை அமைப்பில், சில கோயில்களின் விவரங்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச்சில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி, " புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் கடவுள் உருவ சிலைகள், தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் இதர அசையும் சொத்துகள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் திரட்டப்பட்டு, அவை பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், அந்தந்த கோயில்களின் அசையா சொத்துகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும்" என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையானது, கோயில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக திரட்டி ஆன்லைன் போர்ட்டலில் இடம் பெற செய்யும் நடவடிக்கைகளைத் தொடங்கியது.

இதனிடையே காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை போலி பத்திரம் தயார் செய்து அபகரிப்பு நடக்க, இதில் 3 அரசு அதிகாரிகள் உட்பட 17 பேர் கைதானார்கள். இச்சூழலில் சொத்து விவரங்கள் திரட்டும் பணி தற்காலிகமாக நின்றன. மீண்டும் கோயில் சொத்து விவரங்களை திரட்டும் பணியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தாலும் பணிகள் மந்தமாகவே நடக்கின்றன. “பணிகளை விரைவாக செய்து, கோயில் சொத்து ஆவணங்களை டிஜிட்டல் படுத்த வேண்டும்; இவ்வாறு செய்யும்பட்சத்தில் இதுபோன்ற கோயில் நில மோசடிகள் நடைபெறாது” என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கூறுகையில், "கோயிலுக்கு சொத்துகளை ஏராளமானோர் தானமாக தந்துள்ளனர். அதை பாதுகாக்க வேண்டும். பல சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்க வேண்டும். சொத்து விவரங்களை திரட்டி டிஜிட்டலாக்க தனிக்குழு அமைத்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் புதுச்சேரியின் அனைத்து பிராந்தியங்களிலும் நிறைவேற்ற அரசு உத்தரவிடவேண்டும். கோயில்களின் மீது அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், இதற்கான உத்தரவை உடன் பிறப்பித்து, இப்பணியை போர்கால அடிப்படையில் நிறைவேற்றி கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டும். " என்று தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது,"கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை துல்லியமாக அளவீடு செய்கிறோம். தமிழகத்தைப் பின்பற்றி தேசிய தகவல் மைய உதவியுடன் மொபைல் ஆப் இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் முகமை உதவியுடன் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை சர்வேயர் மூலம் அளவீடு செய்யும் பணியும் நடக்கிறது.

கோயிலுக்கு தானம் கொடுத்துள்ள சொத்துகளைக் கண்டறியும் பணியும் நடக்கிறது. கோயில் சொத்துகள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலாக சென்று கோயில் நிர்வாகிகளை சந்தித்து கோயில்கள் சொத்துகளை அளவீடு செய்து வருகிறோம். இப்பணிகள் முடிந்து, அனைத்து கோயில்களின் சொத்துகளும் நிச்சயம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என்று குறிப்பிடுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE